ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் விலை விபரம் கசிந்தது!
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலின் விபரம் கசிந்துள்ளது. இந்த மாடலின் விலை விபரம் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் பிரிமீயம் அம்சங்களுடன் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதுடன், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு புதிய தலைமுறை மாடலாக கிராண்ட் ஐ10 நியோஸ் கார் விற்பனைக்கு வந்தது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த புதிய மாடலின் விலை விபரம் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய 1.0 லிட்டர் டர்போ மாடல் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிடி என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

இந்த காரில் இருக்கும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதே எஞ்சின் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 120 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனுடன் கிடைக்கிறது.

சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடலில் பல்வேறு கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. க்ரில் அமைப்பு மற்றும் டெயில் கேட்டில் டர்போ பேட்ஜ், உட்புறத்தில் விசேஷ வண்ண ஆக்சஸெரீகளுடன் கூடிய அலங்கார வேலைப்பாடுகள் கூடுதல் மதிப்பை வழங்கும்.

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் ிஸ்டம், புதிய டிஸிட்டல் ஸ்பீடோமீட்டர், மல்டி இன்ஃபர்மேஷன் திரை அமைப்பு, புரொஜெக்டர் பனி விளக்குகள், ரியர் வியூ மானிட்டர், வயர்லெஸ் போன் சார்ஜர், பின்புற பயணிகளுக்கான தனி சார்ஜிங் போர்ட், சுறா துடுப்பு வடிவ ஆன்டென்னா ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் டீஃபாகர், ரியர் கேமரா, ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகிய பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.7.68 லட்சம் விலையும், ஸ்போர்ட்ஸ் டிடி வேரியண்ட்டிர்கு ரூ.7.73 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலைவிட ரூ.1.20 லட்சம் கூடுதல் விலையில் இந்த கார் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Via - Rushlane


Click it and Unblock the Notifications








