கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு
கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி கார் எப்படி இருக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ உருவரை படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய மாடல்கள் அறிமுகத்தில் தீவிரம் காட்டி வருகிறது. செல்டோஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து கார்னிவல் எம்பிவி காரை இன்னும் இரண்டு வாரங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

மூன்றாவது மாடலாக காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க உள்ளது கியா மோட்டார்ஸ். அதாவது, கியா சொனெட் என்ற பெயரில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், சொனெட் காரின் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதத்தில், உருவரை படங்களை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.

வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடலின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

உருவரை படங்களை வைத்து பார்க்கும்போது செல்டோஸ் காரின் மினியேச்சர் மாடலாகவே புதிய கியா சொனெட் கார் டிசைன் செய்யப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், சில குறிப்பிட்ட மாறுதல்களுடன் வேறுபாடுகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள் ஆகியவை இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது. ஸ்கிட் பிளேட், பனி விளக்குகள் ஆகியவற்றையும் காண முடிகிறது.

செல்டோஸ் கார் போன்றே டி பில்லர் அமைப்பு, வலிமையான வீல் ஆர்ச்சுகள், அதில் ஸ்டைலான அலாய் வீல்கள் என பக்கவாட்டு டிசைன் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பின்புறத்தில் இரண்டு டெயில் லைட்டுகளும் நடுவில் விளக்கு சட்டம் ஒன்றின் மூலமாக இணைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், மிக ஸ்டைலான பம்பர், ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்டவையும் இந்த காரின் அழகுக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கும்.

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் புதிய கியா சொனெட் கார் வரும் என்று எதிர்பார்க்கலாம். செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு இந்த காரில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு இரண்டாவது பாதியில், அதாவது, பண்டிகை காலத்தில் புதிய கியா சொனெட் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கியா சொனெட் கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








