கியா நிரோ இவி மாடலில் இத்தனை வசதிகளா..!
தற்சமயம் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் நிரோ இவி என்ற பெயர் கொண்ட கியா நிறுவனத்தின் இவி வாகனம் ஒன்று இந்த நிகழ்ச்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் காண்போம்.

க்ராஸ்ஓவர் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவை சேர்ந்த கியா நிறுவனத்தின் இந்த நிரோ இவி காரில் சிங்கிள் சார்ஜில் சுமார் 450 கிமீ வரை இயங்கக்கூடிய பேட்டரி அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த எலக்ட்ரிக் மாடலின் அடையாளமாகவும் விளங்குகிறது.

இந்த எலக்ட்ரிக் காரின் நீளம் 4,373 மிமீ ஆகவும், உயரம் 1569 மிமீ ஆகவும், அகலம் 1805 மிமீ ஆகவும் உள்ளது. வீல்பேஸ் 2,700 மிமீ-ல் கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜ் போர்ட் உடன் உள்ள ஏரோடைனாமிக் க்ரில் அமைப்பை இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கொண்டுள்ளது.

இந்த க்ரில்லின் பார்டர், முன்புற மற்றும் பின்புற பம்பர்களின் இரு முனைகளில் மற்றும் ஓஆர்விஎம்களில் கொடுக்கப்பட்டுள்ள நீல நிறம், இது இவி வாகனம் என்பதை கூறாமல் கூறுவதுபோல் உள்ளது. இதன் ஃபாக் விளக்கு தேவையான நேரத்தில் அதிகளவிலும் ஒளியை வெளிப்படுத்தக்கூடியது என்று கூறப்படுகிறது.

ப்ரோஜெக்டர் பீம் ஹெட்லைட் எல்இடி தரத்தில் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் இந்த எஸ்யூவி மாடல், ஸ்போர்ட்டியான ஸ்பாய்லரை பெற்றுள்ளது. பக்கவாட்டில் க்ராஸ்ஓவர் மாடல்களுக்கே உண்டான ஃபண்டரை கருப்பு நிறத்தில் இந்த கியா நிரோ இவி கார் பெற்றுள்ளது.

ரூஃப் ரெயில்கள் வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்து பல டிசைன் தேர்வுகளை பெறும் என தெரிகிறது. உட்புறத்தில் 6-ஸ்பீடு ஆடியோ சிஸ்டம், 6 விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 60/40 விகிதங்களாக பிரிக்கப்பட்ட பின்புற இருக்கைகள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய 7.0 இன்ச் திரையுடன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

இவை மட்டுமின்றி, ஆட்டோ விண்ட்ஷீல்டு டீ-ஃபாக், படம் அல்லது வாய்ஸ் மூலமாக ஓட்டுனரால் பார்க்க முடியாத இடத்தில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வசதி, வயர்லெஸ் ப்ளூடூத் இணைப்பு, லெதரால் மூடப்பட்ட இருக்கைகள், பகல்/இரவு என இரு மோட்களில் செயல்படக்கூடிய பின்புற கேமிரா, பின்புற இருக்கைகளில் அமர்பவர்களுக்கு கப் ஹோல்டர்களுடன் ஹேண்ட் ரெஸ்ட் போன்றவற்றை நிரோ எலக்ட்ரிக் காரின் இந்திய மாடல் பெறும் என நம்பலாம்.

180Ah எலக்ட்ரிக் மோட்டர் இந்த நிரோ எலக்ட்ரிக் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் 64kWh ஆற்றல் கொண்ட லித்தியம்-இரும்பு பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் இந்த எலக்ட்ரிக் காரானது அதிகப்பட்சமாக 201 எச்பி பவரையும், 291 என்எம் டார்க் திறனையும் பெற முடியும்.

இதன் எலக்ட்ரிக் மோட்டாருடன் பேட்டரி ஹீட்டிங் சிஸ்டத்தையும் சில நாட்டு சந்தைகளில் கியா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த தொழிற்நுப்டம் இந்திய மாடலில் இருக்குமா என்பது தெரியவில்லை. டேஸ்போர்டு மூலம் பேட்டரியின் சார்ஜ் சதவீதத்தையும் பார்க்க முடியும்.

பாதுகாப்பிற்காக இந்த எலக்ட்ரிக் மாடலில் அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகளை கியா நிறுவனம் கண்டிப்பாக வழங்கியிருக்கும். இது கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எதிர்கால இந்திய அறிமுக மாடல் என்பதால், இந்த எலக்ட்ரிக் காரின் விலை மற்றும் இந்திய அறிமுக தேதி உள்ளிட்ட எந்தவிபரமும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








