மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!
கொரோனா பிரச்னையால் தாமதப்பட்டுப் போன மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் நேற்றுமுன்தினம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பண்டிகை காலத்தில் எம்பிவி கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இந்த மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில், பட்ஜெட்டிற்கு தக்கவாறு இந்த கார் பல வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதில், எந்தெந்த வேரியண்ட்டில் என்னென்ன சலுகைகள் இருக்கின்றன என்பது குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் பிஎஸ்-6 மாடலானது டீசல் எஞ்சின் தேர்வில் M2, M4+ மற்றும் M6+ ஆகிய வேரியண்டட்டுகளில் கிடைக்கும். இந்த மூன்று வேரியண்ட்டுகளுமே இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் கொண்ட 7 சீட்டர் மாடலாகவும் அல்லது பெஞ்ச் இருக்கைகள் கொண்ட 8 சீட்டர் மாடலாகவும் தேர்வுக்கு உள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்2
மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 வேரியண்ட்டில் 16 அங்குல ஸ்டீல் வீல்கள், ஏசி சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள், பவர் விண்டோஸ் வசதி, 7 சீட்டர் மாடலில் ஆர்ம் ரெஸ்ட் வசதி, இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட் ரூ.11.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்4+
பேஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் வசதிகளுடன் கூடுதலாக ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் வசதி, புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி, ரியர் டீஃபாகர், 16 அங்கு அலாய் வீல்கள், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ரியர் வைப்பர், வாஷர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் வழங்கப்படுகின்றன. 7 சீட்டர் மாடல் ரூ.12.37 லட்சத்திலும், 8 சீட்டர் மாடல் ரூ.12.45 லட்சத்திலும் கிடைக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்6+
மஹிந்திரா மராஸ்ஸோவின் விலை உயர்ந்த இந்த டாப் வேரியண்ட்டில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, வளைவுகளில் திரும்பும்போது, அதற்கு தக்கவாறு ஒளியை பாய்ச்சும் வசதியுடன் பனி விளக்குகள், ரியர் வியூ கேமரா, 17 அங்குல அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. 7 சீட்டர் மாடல் ரூ.13.51 லட்சத்திலும், 8 சீட்டர் மாடல் ரூ.13.59 லட்சத்திலும் கிடைக்கிறது.

பழைய டாப் வேரியண்ட் நீக்கம்
மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்4 மாடலில் எம்8 என்ற டாப் வேரியண்ட் வழங்கப்பட்டது. இந்த வேரியண்ட் தற்போது நீக்கப்பட்டுவிட்டது. இந்த வேரியண்ட்டில் கூல்டு க்ளவ்பாக்ஸ், பவர் ஃபோல்டிங் மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை புதிய பிஎஸ்6 மாடலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சின் விபரம்
புதிய மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் தேர்வும் விரைவில் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய எம்பிவி கார்களுக்கு போட்டியாக இருக்கும். இடவசதி, செயல்திறன் மிக்க டீசல் எஞ்சின், போதுமான வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கச்சிதமாக பூர்த்தி செய்யும் எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








