இந்த மாத இறுதியில் இந்திய வாடிக்கையாளர்களை பிரமிப்பூட்ட வருகிறது 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ...
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பு மாடலான ஜிஎல்இ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த எஸ்யூவி கார் வருகிற 28ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதிக அளவில் டிசைன் மாற்றங்களையும், தொழிற்நுட்ப அம்சங்களையும் பெற்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இந்த ஜிஎல்இ மாடலின் வீல்பேஸ் உள்பட அனைத்து பரிமாண அளவுகளும் பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளன. உட்புற கேபினும் சில மாற்றங்களால் தற்போதைய மாடலை விட மிகவும் உயர்ரக தோற்றத்தை அளிக்கிறது.

ஹெட்லைட்ஸ், டெயில்லைட்ஸ் மற்றும் டிஆர்எல்கள் என அனைத்திலும் எல்இடி விளக்குகளுடன் இந்த கார் மிளிர்கிறது. உட்புறத்தில், இன்போடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கு ஒன்று என 12.3 இன்ச்சில் இரு தொடுத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமில்லாமல் நான்கு மோட்களில் க்ளைமேட் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பார்க்கிங், பவர் டெயில்கேட், 360-டிகிரி கேமிரா, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற மற்றும் பின்புற இருக்கைகள் மற்றும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது.

இவற்றுடன் மெர்சிடிஸ் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட எம்பியூஎக்ஸ் கனெக்டட் தொழிற்நுட்பத்தையும் இந்த எஸ்யூவி காருக்கு வழங்கியுள்ளது. இந்த தொழிற்நுட்பம் சமீபத்தில் அறிமுகமான ஜிஎல்சி எஸ்யூவியில் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த ஜிஎல்இ மாடல் ஜிஎல்இ 300டி, ஜிஎல்இ 400டி மற்றும் ஜிஎல்இ 450 என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையாகவுள்ளது. இதில் ஜிஎல்இ 300டி வேரியண்ட் நான்கு சிலிண்டர் அமைப்பை கொண்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றுள்ளது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 256 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஜிஎல்இ 400டி வேரியண்ட் காருக்கு 330 பிஎச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஆறு சிலிண்டர் அமைப்பை உடைய 3.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஜிஎல்இ வேரியண்ட்டான 450 பெட்ரோல் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில் ஆறு சிலிண்டர் அமைப்பை கொண்ட 3.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரொல் என்ஜின் அதிகப்பட்சமாக 367 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது.

இந்த பெட்ரோல் என்ஜினுடன் மில்டு-ஹைப்ரீட் சிஸ்டமும் வழங்கப்படவுள்ளது. இந்த சிஸ்டத்தின் மூலமாக 22 பிஎச்பி பவரை கூடுதலாக எலக்ட்ரிக் மோட்டார் மூலம் பெற முடியும். பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான இந்த மூன்று என்ஜின்களுடனும் நிலையாக ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படவுள்ளது.

இந்த ஜிஎல்இ மாடலை தவிர்த்து, ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் இந்திய மார்க்கெட்டில் ஜிஎல்எஸ், ஜிஎல்இ கூபே, ஏஎம்ஜி ஜிடி நான்கு-கதவு வெர்சன் மற்றும் இக்யூசி மாடலின் எலக்ட்ரிக் வெர்சன் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அனைத்து மாடல் கார்களும் 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் நிறுவனம் இந்த 2020ஆம் ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதற்காக இந்தியாவில் கடுமையாக பணியாற்ற திட்டுமிட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த ஜிஎல்இ மாடலின் மூலம் அந்த கொள்கை பயணத்தை துவங்கவுள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த கார், ஆடி க்யூ7 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 போன்ற கார்களுடன் போட்டியிட வேண்டும்.


Click it and Unblock the Notifications








