2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதத்திலா...? வெளியான புதிய தகவல்
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 எஸ்-க்ளாஸ் மாடலின் உலகளாவிய அறிமுகம் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பென்ஸ் காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சில தினங்களுக்கு முன்பு மெர்சிடிஸ் நிறுவனம் புதிய எஸ்-க்ளாஸ் மாடலின் டீசர் படங்களை வெளியிட்டதை தொடர்ந்து இந்த செடான் கார் மீதான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால் இந்த காரின் அறிமுகத்தை பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் புதிய எஸ்-க்ளாஸ் மாடல் வருகிற செப்டம்பர் மாதத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன் காரணமாக மெர்சிடிஸின் இந்த செடான் காரின் அறிமுகத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியாகி இருந்த இதன் டீசர் படம் புதிய தலைமுறை எஸ்-க்ளாஸ் மாடல் தற்போதய தலைமுறை காரை காட்டிலும் டிசைனிலும் தொழிற்நுட்பத்திலும் மேம்படுத்தப்பட்டு இருப்பதை வெளிக்காட்டியது.

இதனால் கூடுதல் லக்சரி தோற்றத்தில் எதிர்பார்க்கப்படும் இந்த 2021 மாடலின் ஸ்பை படங்களும் கடந்த சில மாதங்களில் இணையத்தில் வெளியாகி இருந்தன. இவற்றின் மூலம் பார்க்கும்போது காரின் முன்புற க்ரில் அமைப்பு முன்பை விட சற்று பெரியதாகவும், தோற்றத்தில் கம்பீரமாகவும், சில க்ரோமையும் கொண்டுள்ளது.

எல்இடி ஹெட்லேம்ப் ஆனது எல்இடி லேசர் யூனிட்களுடன் தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான இ-க்ளாஸ் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் உடன் ஒத்திருக்கிறது. இது மட்டுமின்றி எல்இடி டெயில்லேம்ப்கள், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பெரிய செங்குத்தான தொடுத்திரை உள்ளிட்டவற்றுடன் உள்ள கேபினையும் இ-க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தோற்றத்தில் பெற்றிருப்பதையும் இதன் ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிந்தது.

இதில் செங்குத்தான தொடுத்திரை ஆனது மெர்சிடிஸின் எம்பக்ஸ் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் லேட்டஸ்ட் வெர்சனை கொண்டிருக்கும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய எஸ்-க்ளாஸ் செடான் காருக்கு மில்ட்-ஹைப்ரீட், ப்ளக்-இன் ஹைப்ரீட், 3.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

ஆனால் 4.0 லிட்டர் வி8 என்ஜின் தேர்வு இந்த 2021 மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட உள்ளது. புதிய எஸ்-க்ளாஸ் மாடலின் தயாரிப்பு பணிகள் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே மெர்சிடிஸ் நிறுவனம் கூறியிருந்தது.


Click it and Unblock the Notifications








