ரேபிட் காருக்கு மாற்றாக அட்டகாசமான புதிய கார் மாடலை களமிறக்கும் ஸ்கோடா!!
ரேபிட் காருக்கு மாற்றாக அட்டகாசமான புதிய செடான் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என இரண்டு பிராண்டுகளின் வர்த்தமும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொர்ந்து, இந்தியாவில் பல புதிய கார் மாடல்களையும் புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில், புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் முதல் மாடலாக ஃபோக்ஸ்வேகன் விஷன் ஐஎன் கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடல் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதைத்தொடர்ந்து புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரண்டாவது கார் மாடல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆட்டோ எக்ஸ் தளத்திற்கு பேட்டியளித்துள்ள ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹோல்லிஸ் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்," இந்தியாவில் புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் புத்தம் புதிய செடான் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம். இந்த மாடலை நேரடியாக பார்த்தேன். மிக சிறப்பாக இருக்கிறது. எஸ்யூவி கார்களால் செடான் கார் மார்க்கெட் சரிவை சந்தித்து வருவதை இந்த புதிய செடான் கார் மாடல் நிறுத்தும்.

அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். லாக் டவுன் முடிந்த உடன் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக, ரேபிட் காரின் புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலானது வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவில் சில மாற்றங்களுடன் இந்த கார் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய மாடலானது 4.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இதே மாடலானது ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் வென்ட்டோ காருக்கு மாற்றாக செல்லும். அதாவது, இரண்டு கார்களும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்களாக இருக்கும் என்பதுடன், எஞ்சின் தேர்வுகள் ஒன்றாகவே இருக்கும்.

இதனிடையே, இந்த மாதம் வர இருந்த ரேபிட் பிஎஸ்6 மாடல், கரோக் எஸ்யூவி மற்றும் சூப்பர்ப் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அடுத்த மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வு வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications








