பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி... முக்கியத் தகவல்கள்!
பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய டாடா கிராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி இடம்பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. புதிய மாடல்களின் வரவும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது சந்தைப் போட்டியை சமாளிப்பதற்கு அதிக வசதிகள் மற்றும் கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்தில் 7 சீட்டர் வெர்ஷன்களும் அறிமுகம் செய்வதில் கார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. க்ராவிட்டாஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த 7 சீட்டர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

முக்கிய மாற்றங்கள்
டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு மற்றும் பரிமாணத்தில் சில மாற்றங்களை சந்தித்துள்ளது. பின்பகுதியில் சற்றே நீளம் அதிகரிக்கப்பட்டு மூன்றாவது இருக்கைக்கு போதிய இடவசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஹாரியர், க்ராவிட்டாஸ் ஆகிய இரண்டு மாடல்களின் வீல்பேஸ் நீளம் ஒன்றுதான்.

பரிமாணம்
டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியானது 4,661 மிமீ நீளமும், 1,894 மிமீ அகலமும், 1,786 மிமீ உயரமும் பெற்றஇருக்கிறது. இதன் வீல் பேஸ் நீளம் 2,741 மிமீ ஆக உள்ளது. ஹாரியர் எஸ்யூவியுடன் ஒப்பிடுகையில், நீளம் 63 மிமீ அதிகரித்துள்ளது. அகலத்தில் மாற்றமில்லை. உயரம் 80 மிமீ குறைக்கப்பட்டுள்ளது.

முக்கிய வசதிகள்
டாடா ஹாரியர் எஸ்யூவியில் இருக்கும் பல சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும். இந்த காரில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 7 அங்குல திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுடன் வர இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளுடன் வர இருக்கிறது.

எஞ்சின் தேர்வுகள்
புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹாரியர் எஸ்யூவியில் இருக்கும் அதே டீசல் எஞ்சின்தான் என்றாலும், கூடுதலாக 30 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை
புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி தீபாவளி பண்டிகையொட்டி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளுடன் நேரடியாக போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








