கியா செல்டோஸிற்கு போட்டியாக புதிய எஸ்யூவியை இந்தியாவில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கியா சொல்டோஸ் மாடலுக்கு போட்டியாக எஸ்யூவி பிரிவில் புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய எஸ்யூவி மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

விரைவில் டெல்லியில் துவங்கவுள்ள இந்திய ஆட்டோ எக்ஸ்போவிற்கென பல திட்டங்களை இந்நிறுவனம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த திட்டங்களில் முக்கியமாக, லோகோ மற்றும் ப்ராண்ட் டிசைன் மாற்றம் உள்ளது. மேலும் புதிய எஸ்யூவி அறிமுகமும் ஃபோக்ஸ்வேகனின் திட்டத்தில் ஒன்றாகும்.
செல்டோஸிற்கு போட்டியாக புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தவுள்ள இந்நிறுவனம் முன்னதாக, டி-ராக், டி-க்ராஸ், டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஐ.டி.க்ராஸ் ஆல்-எலக்ட்ரிக் கான்செப்ட் போன்ற எஸ்யூவி மாடல்கள் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த புதிய எஸ்யூவி, வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இரவு வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. மேலும், அறிமுகத்தின்போது இந்த எஸ்யூவியின் இந்திய சந்தைக்கான பெயரும் வெளியிடப்படும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவியின் டீசரில் மிகவும் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. இதன்படி பார்க்கும்போது ட்வின்-பேட் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் இந்நிறுவனத்தின் மற்ற மாடர்ன் மாடல்களுடன் ஒத்துப்போகக்கூடிய முன்புற டிசைன் உள்ளிட்டவற்றை ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

மொத்தமாக இந்த எஸ்யூவி மாடல், இந்நிறுவனத்தின் டி-க்ராஸ் மாடலின் தோற்றத்தை கொண்டுள்ளது. எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு அறிமுகமாகவுள்ள இரண்டாவது ஃபோக்ஸ்வேகன் மாடலாக இந்த புதிய எஸ்யூவி மாடல் விளங்கவுள்ளது.

முதல் தயாரிப்பாக, கூட்டணி நிறுவனமான ஸ்கோடாவின் விஷன் இன் கான்செப்ட் அறிமுகமாகவுள்ளது. ஸ்கோடாவின் இந்த கான்செப்ட் மாடலின் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருக்கும் என தெரிகிறது.

மீண்டும் ஃபோக்ஸ்வேகனின் புதிய எஸ்யூவியை பற்றிய தகவலுக்கு வருவோம். இந்நிறுவனம் இந்த புதிய எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜினை வழங்கவுள்ளது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (டிசிடி) கியர்பாக்ஸ் கொடுக்கப்படவுள்ளன.

இந்த புதிய கட்டமைப்பில் உருவாக்கப்படும் அனைத்து கார்களும் ஃப்ரண்ட்-வீல்-ட்ரைவ்-ஐ கொண்டிருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் சில வருடங்களுக்கு ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்களில் இருந்து ஆல்-வீல் ட்ரைவ் மாடல்கள் சந்தைக்கு வருவது அரிதாக தான் இருக்கும்.

கியா செல்டோஸ் மட்டுமின்றி இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டா மாடலுக்கு போட்டியாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகனங்கள் எதுவும் பெரிய அளவில் கடந்த வருடத்தில் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யவில்லை.

தற்போது புதியதாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் கொண்டுவரப்படவுள்ள லோகோ, ப்ராண்ட் டிசைன் மற்றும் புதிய எஸ்யூவி மாடலின் அறிமுகத்தால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








