ஹூண்டாய் ஐ20 கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி... வருகிறது புது வேரியண்ட்...!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் இரண்டு வாரங்களில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை ஐ20 மாடலின் தோற்றம் மற்றும் காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த மாத துவக்கத்தில் ஜெனிவாவில் நடைபெற இருந்த மோட்டார் கண்காட்சியில் இந்த புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் கார் காட்சிப்படுத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை கார் ஸ்போர்டியான என் லைன் வேரியண்ட்டை பெறவுள்ளது. இந்த வேரியண்ட் தற்சமயம் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஐ20 மாடலில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த தகவலை ‘to be continued' என்ற வரியுடன் வெளிவந்துள்ள டீசர் வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் ஸ்போர்டி என் லைன் வேரியண்ட்டை தவிர்த்து இந்த வீடியோவின் மூலமாக வேறெந்த தகவலையும் அறிய முடியவில்லை.

ஆனால் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள அடுத்த தலைமுறை ஐ20 மாடலின் நிழலின் மூலமாக சில தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, தற்போதைய மாடலை விட பெரியதான சக்கரங்களை 2020 ஐ20 மாடலின் என் லைன் வேரியண்ட் கார் பெற்றிருப்பது உறுதியாகிறது.

அதேபோல் மேற்கூரையில் பெரிய அளவிலான ஸ்பாய்லர், சிறிது ரீ-டிசைன் செய்யப்பட்ட முன்பகுதி மற்றும் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில இடங்களில் சிவப்பு நிறத்தில் டிசைன்கள் உள்ளிட்டவை ஐ20 மாடலின் இந்த புதிய ஸ்போர்டி என் லைன் வேரியண்ட்டில் வழங்கப்பட்டிருப்பதும் நமக்கு தெரிய வருகிறது.

இருப்பினும் 2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் உட்புற கேபின் தற்போதைய ஐ20 மாடலை தான் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை காரில் மிக முக்கியமான அப்டேட்டாக இந்த மாடலில் பொருத்தப்படவுள்ள என்ஜின் அமைப்பு பார்க்கப்படுகிறது.

ஐ20 மாடலின் புதிய என் லைன் வேரியண்ட்டில் 1.6 லிட்டர் நேரடி-இன்ஜெக்ஷன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை வழங்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும் இந்த பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் அதிகப்பட்சமாக 200 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஐ20 மாடலின் மூன்றாவது தலைமுறை காராக சந்தைக்கு வரவுள்ள இந்த என் லைன் வேரியண்ட் இந்தியாவில் இந்த வருடத்தில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு தான். ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் இந்த 2020ஆம் வருடத்திற்காக ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரை ஒதுக்கி வைத்துள்ளது.

தற்சமயம் விற்பனையில் உள்ள ஐ20 மாடலின் இரண்டாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் உள்ள பெட்ரோல் என்ஜின் சமீபத்தில் தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான அப்டேட்டை பெற்றது. 1.4 லிட்டர் என்ஜினுடன் இயங்கிவரும் ஐ20 பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்4 தரத்தில் வெளிப்படுத்திய அதே 90 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை தான் பிஎஸ்6 மாடலுக்கும் வழங்கி வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை மாடலை 2020ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. இந்த புதிய தலைமுறை காரானது, தற்போதைய ஐ20 மாடலின் பெட்ரோல் என்ஜினுடன், கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை போன்று டீட்யூன் செய்யப்பட்ட டீசல் வேரியண்ட்டையும் பெறவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோவின் மூலம் ஐ20 மாடலின் ஸ்போர்டியான என் லைன் வேரியண்ட் அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இதுதான் இந்தியாவில் களமிறங்கும் முதல் ஐ20 என் லைன் வேரியண்ட்டாகவும் திகழவுள்ளது.


Click it and Unblock the Notifications








