ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களுக்கு ஓர் குட் நியூஸ்... மிக விரைவில் வருகிறது புதிய மஹிந்திரா தார்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி உள்ளது. ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற சிறந்த வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கிறது.

இந்த நிலையில், தற்போது ஆஃப்ரோடு சாகசங்கள் மீதான ஈர்ப்பு இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும், தொழில்நுட்ப அளவில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதனை மனதில் வைத்து புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடலைவிட பரிமாணத்தில் பெரிய மாடலாகவும், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி வர இருக்கிறது.

கடந்த பல மாதங்களாக புதிய தலைமுறை தார் எஸ்யூவியை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி மஹிந்திரா ஆய்வுகளை செய்து மேம்படுத்தி வருகிறது. இறுதிக்கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கார் அண்ட் பைக் தளத்திடம் பேசியுள்ள மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வர்த்தகப் பிரிவு தலைமை செயல் அதிகாரி விஜய் ராம் நக்ரா,"மிக விரைவில் தார் எஸ்யூவியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். பொது முடக்கம் முடிவுக்கு வந்தவுடன் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும்.

மேலும், அதாவது, எங்களது அடுத்த அறிமுகமாக புதிய தார் எஸ்யூவி இருக்கும். இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் புதிய தார் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ஹார்டு டாப் ஆப்ஷனுடன் வருகிரது. முன்புறம் நோக்கிய இருக்கைகளும், சீட்பெல்டுகளும் முக்கிய அம்சமாக இருக்கும்.

புதிய தார் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. புதிய தார் எஸ்யூவி அனைத்து விதத்திலும் இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








