கொரோனா எஃபெக்ட்... இரண்டு அட்டகாசமான பென்ஸ் கார்கள் வருகையில் தாமதம்!
கொரோனா பிரச்னை காரணமாக, இரண்டு அட்டகாசமான பெனஸ் சொகுசு கார்களின் வருகையில் தாமதமாகி உள்ளது. அந்த கார்களின் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் உயர்வகை சொகுசு செடான் கார் மாடலாக எஸ் க்ளாஸ் உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. எத்தனை விலை உயர்ந்த கார்கள் இருந்தாலும், பெரும் கோடீஸ்வரர்களின் கராஜில் எஸ் க்ளாஸ் கார் இல்லாமல் நிறைவு பெறாது.

அதேபோன்று, இந்தியா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் பணக்காரர்களின் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வரும் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார். இந்த இரண்டு கார்களுமே விற்பனையில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் கால மாற்றத்திற்கு தக்கவாறு நவீன அம்சங்களுடன் இந்த இரண்டு கார்களும் புதிய தலைமுறை மாடல்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய தலைமுறை பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் சர்வதேச அளவில் தனது பயணத்தை துவங்க இருக்கிறது. புதிய டிசைன் மாற்றங்கள், நவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட எஞ்சின் தேர்வுகளுடன் இந்த கார் வர இருக்கிறது. மைல்டு ஹைப்ரிட் மற்றும் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய தலைமுறை எஸ் க்ளாஸ் காரில் கூபே மற்றும் கேப்ரியோலே மாடல்கஔள் விலக்கிக் கொள்ளப்பட்டு, லாங் வீல் பேஸ் மாடல் மட்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மறுபுறத்தில் சில மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய இ க்ளாஸ் கார் கடந்த மாதம் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலும் இந்திய பணக்காரர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. அதாவது, இந்த மாடலானது முழுமையான தலைமுறை மாற்றம் இல்லாமல், இடைக்காலத்திற்கான அப்டேட் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா விற்பனைப் பிரிவு சந்தோஷ் ஐயர் பேட்டி அளித்துள்ளா். அதில், கொரோனா பிரச்னை காரணமாக, எங்களது புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டத்தில் மாறுதல்களை செய்துள்ளோம்.

அதன்படி, புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரும், இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அடுத்த ஆண்டு பிற்பாதியில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, இன்னும் ஓர் ஆண்டுக்கு பின்னரே இந்த இரண்டு மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

பென்ஸ் இ க்ளாஸ் கார் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்தியாவில் மட்டுமே இ க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடலானது வலது புற டிரைவிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. எனவே, உதிரிபாகங்கள் சப்ளை மற்றும் மாறுதல்களை செய்து உற்பத்தி செய்வதற்கு கால தாமதம் ஏற்படும். இதனை மனதில் வைத்தே அடுத்த ஆண்டுக்கு புதிய இ க்ளாஸ் கார் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை எஸ் க்ளாஸ் கார் போன்றே, இ க்ளாஸ் காரிலும் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் ப்ளக் இன் ஹைப்ரிட் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேலும், தற்போதைய மாடலைவிட வசதிகள் அதிகரிக்கப்படுவதால், விலையும் அதிகரிக்கப்படும். தற்போது இ க்ளாஸ் கார் இந்தியாவில் ரூ.59.07 லட்சம் முதல் ரூ.75.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இந்த நிலையில், தற்போது இந்திய மார்க்கெட் எஸ்யூவி பக்கம் திரும்பி இருப்பதால், சொகுசு செடான் கார்களுக்கான மதிப்பு குறைந்து போயுள்ளது. இதனை மனதில் வைத்தே இந்த கார்களின் அறிமுகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து, அடுத்தடுத்து வகை வகையான சொகுசு எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்க மெர்சிடிஸ் பென்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








