ஆர்ப்பரிக்கும் வசதிகளுடன் புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்
நிஸான் நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா முதன்மையாகவும், ஹூண்டாய் வெனியூ இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இந்த ரகத்தில் உள்ள காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்கள் ஓரளவு நல்ல விற்பனையை பதிவு செய்து வருகின்றன.

இதனால், இந்த சந்தையில் களமிறங்குவதற்கு பிற கார் நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், ஜப்பானிய கார் நிறுவனமான நிஸான் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது.

ஏற்கனவே இந்த எஸ்யூவியின் டீசர்கள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில், கொரோனா பிரச்னை தீர்ந்தால், வரும் மே மாதத்தில் இந்த புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிஸான் திட்டமிட்டுள்ளது.

நிஸான் EM2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மேக்னசைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரெனோ ட்ரைபர் கார் உருவாக்கப்பட்ட நிஸான் - ரெனோ கூட்டணியின் CMF-A+ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே மாடலானது ரெனோ பிராண்டிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் வர இருக்கிறது.

புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 95 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த எஸ்யூவியில் எல்இடி விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றுடன் சன்ரூஃப் வசதியும் இடம்பெற இருக்கிறது. எனவே, இதன் ரகத்தில் மிகச் சிறந்த மதிப்பை இந்த மாடல் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ரூ.7.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய நிஸான் மேக்னசைட் எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.
Source: ACI


Click it and Unblock the Notifications








