அதிக வசதிகள், குறைவான விலை.... அசத்தப்போகும் நிஸான் மேக்னைட் எஸ்யூவி!
ஹூண்டாய் வெனியூ காருக்கு போட்டியாக வர இருக்கும் புதிய நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி குறித்த பல முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் எகிடுதகிடாக உள்ளது. இதனை மனதில் வைத்து ஏராளமான மாடல்கள் வரிசை கட்டி விட்டன. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் என அனைத்து மாடல்களும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமும், மதிப்பையும் பெற்று இருக்கின்றன.

இந்த நிலையில், நிஸான் மேக்னைட் காரின் பல முக்கிய தகவல்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த காரின் பல முக்கிய அம்சங்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நிஸான் - ரெனோ கூட்டணியின் CMF-A+ என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் புதிய நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில்தான் ரெனோ ட்ரைபர் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், ட்ரைபர் 7 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், மேக்னைட் 5 சீட்டர் மாடலுக்கு உரிய கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியானது க்ராஸ்ஓவர் ரக மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டீசர்களில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், இரட்டை வண்ணத் தேர்வுகள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அலாய் வீல்களும் இடம்பெறுகின்றன.

இந்த எஸ்யூவியில் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

இது பட்ஜெட் விலையிலான காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தாலும், 360 டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் சன்ரூஃப் ஆகியவை குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாக இருக்கும்.

ரெனோ ட்ரைபர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் வர இருக்கிறது. பின்னர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் அறிமுகம் செய்யப்படும்.

இந்த எஞ்சின் தவிர்த்து, அதிக செயல்திறனை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் இந்த காரில் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எஞ்சின் 95 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொண்டு வரப்படலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக போட்டி இருக்கும் நிலையில், மேக்னைட் எஸ்யூவியை மிக சவாலான நிலையில் நிலைநிறுத்த நிஸான் திட்டமிட்டுள்ளது. அதாவது, ரூ.5.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிற்பகுதியில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








