இந்த விலையிலா வருகிறது புதிய நிஸான் மேக்னைட்... அப்ப ஹேட்ச்பேக் கார்கள் அவ்வளவுதானா?
மிக சவாலான விலையில் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய கார் சந்தையில் தடுமாறி வரும் நிஸான் நிறுவனம் தனது புதிய மேக்னைட் எஸ்யூவி மூலமாக மிக முக்கிய இடத்தை பிடிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. அந்நிறுவனத்தின் 'கேம் சேஞ்சர்' கார் மாடலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மேக்னைட் எஸ்யூவியை டிசைன், வசதிகளில் மிகச் சிறப்பான மாடலாக நிலைநிறுத்துவதற்கான திட்டத்துடன் களமிறங்கி உள்ள நிஸான் நிறுவனம், விலையை மிக சவாலாக நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஹேட்ச்பேக் கார்களுக்கு சவாலான விலையில் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தற்போது வெளியாகி இருக்கும் ஒரு தகவலின்படி, நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரூ.5.50 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வர இருப்பதாக பவர்டிரிஃப்ட் செய்தி தெரிவிக்கிறது. டாப் வேரியண்ட் ரூ.9.55 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் அதிக வர்த்தக வளம் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி களமிறக்கப்பட உள்ளது. இந்த கார் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான எஸ்யூவியாக வர இருக்கிறது. அதாவது, கியா சொனெட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுக்கு இணையான ரகத்தில் குறைவான விலை தேர்வாக இருக்கும்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் இரண்டுவிதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. முதலாவது தேர்வாக 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஆம்பியண்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் வசதிகள், விலை என அனைத்தும் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களைவிட சிறந்த மதிப்பை அளிக்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதன் ஆரம்ப ரக வேரியண்ட்டுகளின் எஞ்சின் செயல்திறன் , கட்டுமானம் உள்ளிட்ட அம்சங்கள் போட்டியாளர்களைவிட திறன் குறைந்ததாக இருப்பது சற்றே ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








