மேக்னைட் கார் பிரியர்களுக்கு நிஸான் கொடுத்த ஷாக் நியுஸ்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்
நிஸான் மேக்னைட் காரை முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான காலம் சுமார் 8 மாதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மேக்னைட் என்ற புதிய காம்பெக்ட்-எஸ்யூவி காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான இந்த காருக்கான முன்பதிவு இதுவரையில் மட்டுமே 20,000 தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் செய்வதறியாமல் திகைத்து போன நிஸான் நிறுவனம் மேக்னைட்டை முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான காலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகப்பட்சமாக 8 மாதங்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நிஸான் மேக்னைட் இந்திய சந்தையில் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (ஒ) என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆரம்ப நிலை எக்ஸ்இ வேரியண்ட்டை வாங்குவோருக்குதான் அதிகப்பட்ச 8 மாத (32 வாரங்கள்) கால காத்திருப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைவான ரூ.4.99 லட்சம் என்ற விலையில் வழங்கப்படுகின்ற இந்த வேரியண்ட்டில் ஒரே ஒரு நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. ஆனால் வருகிற ஜனவரியில் இருந்து மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.5.35 லட்சமாக அதிகரிக்கப்படவுள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

இதே பெட்ரோல் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் அடுத்த எக்ஸ்எல் வேரியண்ட்டை வாங்குவோர் 24 வாரங்களுக்கு மேலாகவும் (6 மாதங்கள்+), எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் வேரியண்ட்களை முன்பதிவு செய்தோர் முறையே 18- 20 வாரங்கள் மற்றும் 8- 10 வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

ப்ரீமியம் (O) வேரியண்ட்டிற்கு நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவதில்லை. டர்போ பெட்ரோல் என்ஜின்- மேனுவல் அமைப்புடன் வாங்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து வேரியண்ட்டிற்கும் குறைந்தது 4 மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் எக்ஸ்-ட்ரோனிக் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் ஆரம்ப நிலைக்கு அடுத்த எக்ஸ்எல் வேரியண்ட்டை வெறும் 2 மாதங்களில் டெலிவிரி எடுத்து விடலாம். இந்த ஸ்டாண்டர்ட் காத்திருப்பு காலங்களுடன் வாடிக்கையாளர்கள் மேக்னைட் காரை ஃப்ளேர் கார்னெட் சிவப்பு நிறத்தில் பெறுவதற்கு கூடுதலாக 1 மாதம் காத்திருக்க வேண்டும்.

மேக்னைட்டை முன்பு செய்பவர்களுக்காக ஆன்லைன் ப்ளாட்ஃபாரத்தை நிஸான் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதில் வாகனத்தை வாங்குவது மட்டுமின்றி சேவைக்கான நியமனங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.


Click it and Unblock the Notifications








