பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஓரம் கட்ட வரும் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி!
போட்டியாளர்களை ஓரம் கட்டும் வகையிலான மிக சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் பிஎஸ்6 எஞ்சின் தேர்வுடன் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த எஞ்சின் தேர்வுகளுக்கு பதிலாக புத்தம் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு இந்த எஸ்யூவியில் இடம்பெற இருப்பது உறுதியாகி இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சினுடன் வருவதால், இதன் போட்டியாளர்கள் கொண்ட சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும். மேலும், இந்த எஞ்சினுடன் 8 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

இதனை எம் மோடில் வைத்து மேனுவல் கியர்பாக்ஸ் போலவும் இயக்க முடியும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் வரும் வாய்ப்புள்ளது. ஆனால், இப்போது அதுகுறித்த நிஸான் தெரிவிக்கவில்லை.

நிஸான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் எஞ்சின் அடிப்படையிலான மிகவும் சிறப்பான சிலிண்டர் கோட்டிங் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிக செயல்திறனையும், அதே சமயத்தில் சிறப்பான மைலேஜையும் வழங்கும் என்று நிஸான் பெருமிதம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நிஸான் கிக்ஸ் பிஎஸ்4 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாகவும், டீசல் மாடலில் இருந்த 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாகவும் இருந்தது.

இந்த நிலையில், கிக்ஸ் எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் விதத்தில், மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் அறிமுகப்படுத்த உள்ளது நிஸான் கார் நிறுவனம். இதே எஞ்சின் விரைவில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியிலும் அறிமுகம் செய்யப்படும். இந்த மாடலானது ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








