இந்தியர்கள் மத்தியில் ரொம்ப ஸ்பீடா ஃபேமஸ் ஆகும் டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்கீருவீங்க
டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார், இந்தியர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமீப காலம் வரை இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து கார்களின் விற்பனையும் படுமோசமான நிலையில் இருந்தது. இதற்கான காரணம் நம் அனைவருக்குமே தெரியும். கொரோனா வைரஸ் பிரச்னைதான் அது. ஆனால் தற்போது நிலைமை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. பயணிகள் கார் சந்தையில் முக்கியமான செக்மெண்ட்கள் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

இதில், பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட் முக்கியமானது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம், பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த கார்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம், 19,433 பலேனோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 11,420 ஆக மட்டுமே இருந்தது. இது 70.17 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை, ஹூண்டாய் ஐ20 பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், 9,852 ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10,140 ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இது 2.84 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. இது குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்ற காராகும். எனவே மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,952 அல்ட்ராஸ் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் கார் நடப்பாண்டு ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் அதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. இருந்தாலும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுதான் டாடா அல்ட்ராஸ் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், டாடா அல்ட்ராஸ் மிகவும் பிரபலமாக இருந்து வருவதற்கு, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் அது பெற்ற 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கும் ஒரு காரணமாகும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை டொயோட்டா க்ளான்சா பெற்றுள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம், டொயோட்டா நிறுவனம் 2,572 க்ளான்சா கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 2,773 ஆக இருந்தது. இது 7.25 சதவீத சரிவு ஆகும். 5வது மற்றும் கடைசி இடத்தை ஃபோக்ஸ்வேகன் போலோ பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், 1,585 போலோ கார்களை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,643 ஆக இருந்தது. இது 3.53 சதவீத வீழ்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications








