சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் இன்னிங்சை துவங்க ஆயத்தமாகி வருகிறது. இந்த முறை தனது கீழ் செயல்பட்டு வரும் சிட்ரோன் நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

சிட்ரோன் பிராண்டில் மாடலாக முதல் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னையில் வைத்து இந்த புதிய எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா காரணமாக, சிட்ரோன் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் சரியான பின்னர் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மே மாதத்தில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன. மேலும், முதல் மாடலை களமிறக்குவதற்கு ஏதுவாக, ஷோரூம்களை அமைக்கும் பணிகளிலும் அந்நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு கார்களுக்கு உரிய மொழுக்கையான டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் டீசல் எஞ்சின் 180 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். ஓசூரில் உள்ள பிஎஸ்ஏ குழுமத்தின் ஆலையில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த எஞ்சின் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் இடம்பெறாது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெறுகிறது. பனோரமீக் சன்ரூஃப் இருப்பதுடன், ஹேண்ட்ஸ் ஃப்ரீ முறையில் டெயில் கேட் திறக்கும் வசதியும் உண்டு.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், பிரம்மாண்ட பம்பர் அமைப்பு ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கும். ரூ.30 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








