டொயோட்டா பிராண்டில் அறிமுகமாகும் 3வது மாருதி கார் இதுதான்!
டொயோட்டா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மூன்றாவது மாருதி கார் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் புதிய கார் தயாரிப்புகளுக்கான முதலீடுகளை குறைக்கும் நோக்கில், இணைந்து செயல்பட்டு வருகின்றன. ரீபேட்ஜ் முறையில் கார்களை பண்ட மாற்று செய்து கொள்ளவும் முடிவு செய்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவில் மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் விரைவில் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், மூன்றாவது கார் மாடலாக மாருதி எர்டிகா கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி எர்டிகா கார் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக எக்கானமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மாருதி எர்டிகா கார் இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், டொயோட்டா நிறுவனம் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இரண்டாம் தலைமுறை மாடலாக இருக்கும் மாருதி எர்டிகா கார் தான் டொயோட்டா பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அதாவது, மாருதி சுஸுகி லோகோவுக்கு பதிலாக டெயோட்டா லோகோ இடம்பெற்றிருக்கும் என்பதுடன் சில சிறிய அளவிலான மாற்றங்களுடன் இந்த புதிய கார் வரலாம். இந்த கார் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படும்.

டொயோட்டா க்ளான்ஸா கார் போன்றே குறிப்பிட்ட சில வேரியண்ட்டுகளில் மட்டும் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பெங்களூர் அருகே பிடதியில் செயல்பட்டு வரும் டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் மாருதி எர்டிகா கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எதிர்பார்க்கலாம். வசதிகளிலும் மாருதி எர்டிகா காரில் இருக்கும் அதே சிறப்பம்சங்களுடன் கிடைக்கும்.

மாருதி எர்டிகா கார் மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட குறைவான விலையில் வரும் டொயோட்டா எம்பிவி கார் மாடலாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








