இனி புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி இந்தியாவில் கிடைக்காது!
அறிமுகம் செய்யப்பட்டத்தில் இருந்து விற்பனை சொதப்பி வந்ததையடுத்து, கேப்ச்சர் எஸ்யூவிக்கு கல்தா கொடுத்துள்ளது ரெனோ கார் நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து பல புதிய மாடல்களை கார் நிறுவனங்கள் தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. மேலும், ஒரே ரகத்தில் இரண்டு எஸ்யூவி மாடல்களை வெவ்வேறு ரகத்திலும் கார் நிறுவனங்கள் நிலைநிறுத்தி வர்த்தகத்தை வளைக்கும் யுக்தியையும் கார் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

இதே பாணியில் ரெனோ கார் நிறுவனம் டஸ்ட்டர் எஸ்யூவியையும், அதற்கு சற்றே பிரிமீயம் ரகத்தில் கேப்ச்சர் எஸ்யூவியையும் நிலைநிறுத்தி இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு கேப்ச்சர் எஸ்யூவியானது இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டஸ்ட்டர் எஸ்யூவியைவிட அதிக சிறப்பம்சங்கள், க்ராஸ்ஓவர் டிசைன் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விலையும் மிகச் சவாலாக நிர்ணயிக்கப்பட்டது. அதேநேரத்தில், டஸ்ட்டர் எஸ்யூவியில் இடம்பெற்ற அதே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் கேப்ச்சர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டது.

இதனால், துவக்கத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தாலும், சந்தையில் இதனை விட அதிக மதிப்புவாய்ந்த மாடல்கள் இருந்ததால், ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு போதிய வர்த்தகம் கிடைக்கவில்லை. தொடர்ந்து விற்பனையில் பின்தங்கியே இருந்து வருகிறது. ரெனோ நிறுவனத்தின் வர்த்தக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரை 6,618 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த நிலையில், கேப்ச்சர் எஸ்யூவியை பிஎஸ்6 தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகள் வழங்குவது அவசியமாகியது.

டஸ்ட்டர் எஸ்யூவியில் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், கேப்ச்சர் எஸ்யூவியிலும் இந்த எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில், கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரெனோ கார் நிறுவனம் விடை கொடுத்துவிட்டதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதை மாடல் நிரந்தமாக விடை கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








