ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை சிறப்பு சேமிப்புச் சலுகைகள்!
ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரையிலான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் மற்றும் சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பண்டிகை காலம் நெருங்கி வருவதையொட்டி, கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் முயற்சிகளை கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. இதற்காக, பல சிறப்பு சேமிப்புச் சலுகைகள் மற்றும் கடன் திட்டங்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் ரெனோ கார் நிறுவனம் தனது பிரபல கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதேபோன்று, மிக குறைவான வட்டி விகிதத்தில் கடன் திட்டங்களையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ரெனோ க்விட்
ரெனோ க்விட் காருக்கு ரூ.49,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 வரை லாயல்டி போனஸாகவும் பெற முடியும். தவிரவும், கார்ப்பரேட் போனஸாக ரூ.9,000 வரை பெறலாம். ரெனோ க்விட் காருக்கு 3.99 சதவீத கடன் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெனோ ட்ரைபர்
ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு ரூ.39,000 மதிப்புடைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மேனுவல் மாடல்களுக்கு மட்டும் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெறலாம். தவிரவும், ரூ.10,000 லாயல்டி போனஸ், ரூ.9,000 கார்ப்பரேட் போனஸ் மற்றும் 3.99 சதவீத கடன் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.1 லட்சம் வரை மதிப்புடைய சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டிற்கு ரூ.50,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அடுத்து பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய டஸ்ட்டர் எஸ்யூவியை வாங்குவோருக்கு ரூ.25,000 வரை கூடுதல் மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். ரூ.20,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ.30,000 கார்ப்பரேட் போனஸாக பெறும் வாய்ப்பும் உள்ளது.

ரெனோ டஸ்ட்டர் டர்போ
ரெனோ டஸ்ட்டர் டர்போ மாடலுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.30,000 வரை கார்ப்பரேட் போனஸாகவும், 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான பராமரிப்பு திட்டத்தை ரூ.20,000 மதிப்புடைய லாயல்டி போனாஸகவும் பழைய ரெனோ வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

வரும் பண்டிகை காலத்தில் புதிய ரெனோ கார் வாங்க விரும்புவோருக்கு இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் மற்றும் கடன் திட்டங்கள் அதிக மதிப்பை தரும் என்று நம்பலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ரெனோ டீலரை தொடர்ந்து விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








