ரூ.6.18 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!
ரெனோ ட்ரைபர் கார் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.4.99 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்த இந்த 7 சீட்டர் மாடலுக்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்தது. கவர்ச்சியான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்கள், மிக குறைவான பட்ஜெட் போன்றவை இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இன்று ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வந்துள்ளது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடலானது வசதிகளை பொறுத்து RXL, RXT மற்றும் RXZ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் RXZ டாப் வேரியண்ட் ஏராளமான வசதிகளை அளிக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்புவாய்ந்ததாகவும் இருக்கிறது.

இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 61 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் வழங்கப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஈஸி ஆர் ஏஎம்டி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. மேலும், இதன் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வந்துள்ளது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடலில் மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது இருக்கையை எளிதாக கழற்றி மாட்டும் வசதியும் உள்ளது. சாதாரணமாக 84 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கையை கழற்றினால் 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், புஷ் பட்டன் ஸ்டார்ட், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் கேமரா, கூல்டு க்ளவ் பாக்ஸ், க்ளைமேட் கன்ட்ரோல், பின் இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய வசதிகளாக உள்ளன.

புதிய ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடலின் RXL வேரியண்ட்டிற்கு ரூ.6.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், RXT வேரியண்ட்டிற்கு ரூ.6.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், RXZ வேரியண்ட்டிற்கு ரூ.7.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்டுகளை ஒப்பிடும்போது ரூ.40,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடலுக்கு ரெனோ இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த ஓரிரு வாரங்களில் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. பெரும்பாலான டீலர்களுக்கு ட்ரைபர் ஏஎம்டி டெஸ்ட் டிரைவ் கார்கள் வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








