விரைவில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி!
ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை சூடுபிடிக்கத் துவங்கி இருப்பதையடுத்து, இந்த துறையில் அதிக முதலீடுகளை செய்ய ஃபோக்ஸ்வேகன் குழுமம் அதிக ஒத்துழைப்பை ஸ்கோடாவுக்கு வழங்கி வருகிறது.

அதன்படி, எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும், எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால், முதல் எலெக்ட்ரிக் மாடலை எஸ்யூவி ரகத்தில் களமிறக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி Enyaq என்ற பெயரில் வர இருக்கிறது.

அதாவது, ஸ்கோடா நிறுவனத்தின் அனைத்து புதிய எஸ்யூவி மாடல்களின் பெயரின் கடைசி எழுத்து q என்று முடியும் வகையில் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. புதிய மாடல்களை இதே பாணியில் பெயர் சூட்டி வருகிறது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட Kodiaq, Kamiq, Karoq என்ற வரிசையில் இந்த புதிய மாடல் Enyaq என்ற பெயரில் வருகிறது. முதல் E என்ற எழுத்து Electric என்ற மின்சார வாகனத்தை குறிக்கும் வகையில் இந்த பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய ஸ்கோடா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடலானது ஸ்கோடா விஷன் iV என்ற கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்களுடன் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. எனவே, இது கூபே வகை எஸ்யூவி மாடலாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

புதிய ஸ்கோடா Enyag எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்படும், எந்தெந்த நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








