ஸ்கோடாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... செப்டம்பர் 1ல் உலகளவில் அறிமுகமாகுகிறது...
ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்இபி ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் மாடலான ஸ்கோடாவின் புதிய என்யாக் ஐவி எஸ்யூவி மாடல் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக தயாராகியுள்ள என்யாக் ஐவி கார் பெரும்பான்மையான பாடி பேனல்களை ஃபோக்ஸ்வேகனின் ஐடி 3-ல் இருந்து பெற்றுள்ளது. இந்த புதிய ஸ்கோடா எஸ்யூவி காரின் தோற்றமும் காரை பற்றிய விபரங்களும் செக் குடியரசு நாட்டில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ தேதி வெளியிடப்பட்டுள்ள இதே நேரத்தில் இந்த எலக்ட்ரிக் காரின் ஸ்கெட்ச் படத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனம் 10 எலக்ட்ரிக் மாடல்களை வருங்காலத்தில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ஐவி சப்-ப்ராண்ட்டின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டிற்குள்ளாக வெளிவரவுள்ள இந்த 10 எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாக என்யாக் மாடல் 2021ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. என்யாக் என்ற பெயர்பலகை ஐயர்லாந்தைச் சார்ந்த என்யா என்ற பெயரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு அர்த்தம், வாழ்க்கை ஆதாரம் ஆ,கும். இதனுடன் பயன்படுத்தப்பட்டுள்ள ‘க்யூ', ஸ்கோடாவின் எரிபொருள் என்ஜின் எஸ்யூவி கார்களான காமிக், கரோக் மற்றும் கோடியாக் உள்ளிட்டவற்றை குறிக்கிறது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் 2019 ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

எம்இபி ப்ளாட்ஃபாரத்தை சேர்ந்த மற்ற மெஷின்களை போன்று என்யாக் இவி காரும் பின் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் தேர்வையும், மூன்று பேட்டரி தேர்வுகளையும் ஐந்து ஆற்றல் வெளியீடுகளையும் பெற்றுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன்படி இந்த எலக்ட்ரிக் காரில் பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பாக 72kWh யூனிட் வழங்கப்படவுள்ளது. 204 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்படவுள்ள இந்த பேட்டரி மூலமாக 500கிமீ ரேஞ்ச்சை பெற முடியும்.

என்யாக் எலக்ட்ரிக் காரின் உட்புற கேபினின் அளவு கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனையில் உள்ள கோடியாக் எஸ்யூவி உடன் ஒத்திருக்கும் என ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் அடுத்த ஆண்டில் விஷன் இன் கான்செப்ட்டில் உருவாகியுள்ள புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








