ஸ்கோடா ஆக்டேவியா 245 காரின் முதல் லாட் முன்பதிவு நிறைவு?
இந்தியாவிற்கு முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பெரும்பாலான ஸ்கோடா ஆக்டேவியா ஆர்245 கார்களுக்கு புக்கிங் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா காரின் சக்திவாய்ந்த மாடலாக ஆர்எஸ் 245 கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சினுடன் வரும் இந்த பவர்ஃபுல் செடான் காருக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் எக்கச்சக்க வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, ஸ்கோடா ஆக்டேவியா காரின் புதிய ஆர்எஸ்245 மாடல் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மார்ச் 1ந் தேதி முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கி மிக குறுகிய காலத்தில் இந்த காருக்கு சரசரவென முன்பதிவு முடிந்துள்ளது.

இந்த நிலையில், இந்த முறை 200 கார்கள் இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், ஒரு சில யூனிட்டுகளை தவிர்த்து, பெரும்பாலான கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாக ஆட்டோகார் இந்தியா தளத்துடனான பேட்டியின்போது ஸ்கோடா ஆட்டோ இந்தியா இயக்குனர் ஸாக் ஹோல்லிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. மேலும், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில் பல்வேறு நகாசு வேலைப்பாடுகள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் உள்ளன. கருப்பு பின்னணி கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர், விசேஷ கருப்பு பூச்சுடன் க்ரில் அமைப்பு, பூட் ஸ்பாய்லர், 18 அங்குல அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் போன்றவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. ரூ.35.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியர்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால், அடுத்து ஒரு லாட்டும் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








