அட்டகாசமான நிறத்தில் டீலர்களை சென்றடைந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...
கடந்த மார்ச் 1ஆம் தேதி முன்பதிவுகள் துவங்கப்பட்டதை அடுத்து ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை ஸ்கோடா நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த வகையில் டீலர்களிடம் சென்றுள்ள இந்த புதிய கார் பச்சை, கேண்டி வெள்ளை மற்றும் ரேஸ் ப்ளூ என்ற நிறங்களில் காட்சியளிக்கிறது.

இந்த பெயிண்ட் அமைப்புடன் கொரிடா ரெட் மற்றும் மேஜிக் ப்ளாக் நிறத்தேர்வுகளிலும் புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் பச்சை மெட்டாலிக் ஷேட்களை டபிள்யூஆர்சி மற்றும் மோண்டே காலோ ரேலி போன்ற போட்டிகளில் கலந்து கொண்ட ஸ்கோடாவின் பராம்பரிய மாடல்களில் பார்த்திருப்போம்.

இந்த பெயிண்ட் அமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்பது உறுதி. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஸ்கோடாவின் இணையத்தள பக்கத்தில் ரூ.1 லட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. வெறும் 200 யூனிட்கள் மட்டுமே சந்தைப்படுத்தப்படவுள்ள ஸ்கோடாவின் இந்த புதிய கார் சிபியூ முறையில் இந்தியாவை வந்தடைகிறது.

புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.35.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடையே மிகுந்த பிரபலமான ஆர்எஸ் மாடலின் மூன்றாம் தலைமுறை காராக விற்பனைக்கு வரும் இந்த கார் கடந்த மாதம் நொய்டாவில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 245 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

100 kmph வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும். டிசைன் அமைப்பை பொறுத்தவரையில், ஆக்டேவியா மாடலில் இருந்து சில மாறுப்பட்ட டிசைன்களை புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 கார்களில் ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது.

18-இன்ச்சில் ட்யூல்-டோன் வேகா அலாய் சக்கரங்களை கொண்டுள்ள இந்த காரில் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஸ்பாய்லர், பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் க்வாட்ரா ஹெட்லைட்ஸ் மற்றும் ஆர்எஸ் பேட்ஜ்ஸ் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

விறைந்த சஸ்பென்ஷன் மற்றும் எலக்ட்ரானிக்கல் மூலமாக ஒழுங்கப்படுத்தக்கூடிய விஏக்யூ லிமிடேட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியலில் இருந்து சிறப்பான ஹேண்ட்லிங்கிற்காக சேசிஸ் 15மிமீ தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள மற்ற முக்கிய வசதிகளாக 20.32 செ.மீ தொடுத்திரை இன்போடெயின்மெண்ட், எலக்ட்ரிக்கல் மூலமாக 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், ட்யூல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் அல்காண்டாரா ப்ளாக் லெதர் இருக்கைகள் உள்ளன.
டீலர்ஷிப்களுக்கு புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடல் சென்றடைய துவங்கியுள்ளதால் இதன் டெலிவிரிகளை கொரோனா வைரஸின் தாக்கம் தணிந்தபின் எதிர்பார்க்கலாம். இந்த காருக்கு சந்தையில் எந்த மாடலும் நேரடி போட்டியினை தருவதில்லை.


Click it and Unblock the Notifications








