ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதம் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 எஞ்சின் கொண்ட மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா போன்ற நேரடி போட்டியாளர்களை ஒப்பிடுகையில், ஸ்கோடா ரேபிட் காரின் விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்பட்டதுடன், விலைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், எதிர்பார்ப்பை விஞ்சிய வகையில் வசதிகளும் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் இடம்பெற்றிருந்தன.

இதனால், ஸ்கோடா ரேபிட் கார் விலை அறிவிப்பு வெளியான உடனே நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், ஆட்டோமேட்டிக் மாடல் இல்லாதது குறையாக இருந்தது. இந்த குறையை போக்கும் விதத்தில், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போரையும் கவரும் வகையில், இன்று ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலானது ரைடர் ப்ளஸ், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டி கார்லோ என 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஸ்கோடா ரேபிட் ரூ.9.49 லட்சம் முதல் ரூ.13.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் காரில் இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் தற்போது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது. ஸ்கோடா ரேபிட் காரின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 18.97 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.24 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் காரின் டாப் வேரியண்ட்டில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்லிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஓட்டுனர் இரு்ககையை அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளையும் பெற்றுள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடலானது ஹூண்டாய் வெர்னா டர்போ டிசிடி, ஹோண்டா சிட்டி சிவிடி, டொயோட்டா யாரிஸ் சிவிடி மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








