ஸ்கோடா விஷன் ஐஎன் எஸ்யூவி கான்செப்ட் பார்வைக்கு வந்தது... படங்களுடன் தகவல்கள்!
ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் கார் இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த பல முக்கியத் தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் அதிரடியாக பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன்படி, ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் நிகழ்ச்சியில் தனது புதிய எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை இந்தியாவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் 4,256 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். அதிக வீல் பேஸ் நீளத்துடன், மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் மாடலில் ஸ்கோடாவின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் 19 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன.

இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளன. பனோரமிக் சன்ரூஃப், ஷிஃப்ட் பை வயர் சிஸ்டத்துடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய எஸ்யூவியில் 147.5 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். மேலும், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்ப்டடு இறுக்கும். இந்த காரின் தயாரிப்பு நிலை மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் இடம்பெறும் என்று தெரிகிறது.

புதிய ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது மணிக்கு 195 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 8.7 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த புதிய ஸ்கோடா எஸ்யூவி அடுத்த ஆண்டு தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்படும். இந்த கார் ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனையை புதிய பரிமாணத்தில் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








