ஆஹா விலை... ஓஹோ ரேஞ்ச்... விரைவில் வருகிறது ஸ்ட்ரோம் ஆர்3 எலெக்ட்ரிக் கார்!
ஸ்ட்ரோம் ஆர்3 எலெக்ட்ரிக் கார் மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மும்பையை சேர்ந்த ஸ்ட்ரோம் நிறுவனம் உலகிலேயே மிக குறைவான விலை எலெக்ட்ரிக் கார் மாடலை கொண்டு வரும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, அந்நிறுவனம் ஸ்ட்ரோம் ஆர்3 என்ற மூன்றுசக்கர எலெக்ட்ரிக் கார் மாடலை இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது.

இந்த புதிய ஸ்ட்ரோம் ஆர்3 எலெக்ட்ரிக் கார் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனாவால் இந்த காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழலில், ஊரடங்கு தளர்ந்தவுடன், ஸ்ட்ரோம் ஆர்3 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது. மேலும், இந்த காருக்கு ரூ.4.5 லட்சம் என்ற மிக சவாலான எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக அளவில் மிக குறைவான விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக இது இருக்கும். இது மூன்றுசக்கரங்கள் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, டிரிக்கி எனப்படும் வகையிலும், அதேநேரத்தில் முன்புறத்தில் இரண்டு சக்கரமும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் கொண்டதாக புதுமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 2,907 மிமீ நீளமும், 1,450 மிமீ அகலமும், 1,572 மிமீ உயரமும் கொண்டது. 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 550 கிலோ வெற்று எடை கொண்டது. இந்த கார் மூன்றுசக்கர வாகனமாக இருந்தாலும், மிகச் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 13 அங்குல சக்கரங்களும், 155/80 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் அலாய் வீல்களும், பின்புறத்தில் ஸ்டீல் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரின் உட்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 4.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4ஜி கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், வாய்ஸ் கன்ட்ரோல், கெஸ்ச்சர் கன்ட்ரோல், 20 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. பவர் விண்டோஸ், க்ளைமேட் கன்ட்ரோல், ரிமோட் கீ லெஸ் என்ட்ரீ, 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகளும் உள்ளன.

இந்த காரின் பின்பகுதியில் 300 லிட்டர் கொள்திறன் கொண்ட லக்கேஜ் அறையும், முன்புறத்தில் 100 லிட்டர் கொள்திறன் கொண்ட லக்கேஜ் அறையும் உள்ளன.

இந்த காரில் வழங்கப்படும் மின் மோட்டார் அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் பயணிக்கலாம். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 3 மணிநேரம் பிடிக்கும்.
புதிய ஸ்ட்ரோம் ஆர்3 எலெக்ட்ரிக் கார் ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் ஸ்பேஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரு்ககு ஓர் ஆண்டு அல்லது 15,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








