சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்குகிறது
மாருதி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்க இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அண்மையில் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அரங்கில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஜிம்னி எஸ்யூவியின் சியரா மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மினி எஸ்யூவி இந்தியர்களின் ஆவலை வெகுவாக கிளறியுள்ளது. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் குறித்து எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மிக விரைவில் புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் மே மாதம் அல்லது ஜூன் துவக்கத்தில் உற்பத்தி துவங்கப்படும். இதையடுத்து, அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

மாருதி நிறுவனத்தின் குர்கான் ஆலையில்தான் புதிய ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. ஜிப்ஸி, பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ், ஈக்கோ மற்றும் கேரி ஆகிய வாகனங்களுடன் சேர்த்து இந்த புதிய மாடலும் உற்பத்தி செய்யப்படும்.

குர்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மாருதி பிராண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். மேலும், உள்நாட்டு விற்பனைக்கு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே விற்பனையில் உள்ள மாருதி நிறுவனத்தின் உதிரிபாகங்கள், எஞ்சின் உள்ளிட்டவற்றை இந்த புதிய ஜிம்னி எஸ்யூவியும் பங்கிட்டுக் கொள்ளும். இதனால், இந்த எஸ்யூவி வர்த்தக ரீதியிலும் மாருதிக்கு வலு சேர்க்கும்.

இந்தியாவில் ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வெளிநாடுகளில் ஜிம்னி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் ஜிப்ஸி பெயரிலேயே அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

பழைய ஜீப் எஸ்யூவிகளை போன்ற மிக முரட்டுத்தனமான தோற்றத்துடன் இந்த மினி எஸ்யூவி கவர்கிறது. பாரம்பரியமான முகப்பு க்ரில் அமைப்பு, வட்ட வடிவிலான ஹெட்லைட், வலிமையான பம்பர், அதிக தரை இடைவெளி ஆகியவற்றுடன் ராணுவ வாகனம் போல கட்டுறுதியாக இருக்கிறது.

ஜப்பானில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் 658 சிசி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 64 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்தியாவில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எஸ்யூவியின் மிக முக்கிய சிறப்பம்சமே, 4 வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக இருக்கும். ராணுவ பயன்பாடு மற்றும் ஆஃப்ரோடு பிரியர்களின் கவனத்தை வெகுவாக கவரும் அம்சங்களை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது.
Source:Gaadiwaadi


Click it and Unblock the Notifications