டாடா அல்ட்ராஸ் மாடலின் முதல் மாத விற்பனை நிலவரம்... பலேனோ, ஐ20 மாடல்களுக்கு பிறகு இதுதானாம்...!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் அறிமுகமாகியிருந்த புதிய அல்ட்ராஸ் மாடலின் முதல் மாத விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட அல்ட்ராஸ் மாடலின் முன்பதிவு எண்ணிக்கைகள் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது இந்த காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த மாதம் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த அல்ட்ராஸ் மாடல் கடந்த ஜனவரியில் 4,505 யூனிட் விற்பனையை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது. இதன் பிரிவில் உள்ள மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 போன்ற பிரபலமான மாடல்களுடன் போட்டியிட்டு இந்த எண்ணிக்கையை இந்த கார் பெற்றுள்ளதால், இது சிறந்த விற்பனை எண்ணிக்கையே.

மொத்தமாக கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் 36,327 ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 33,083 யூனிட்கள் விற்பனையான 2019 ஜனவரி மாதத்தை விட 10 சதவீதம் அதிகமாகும்.

கடந்த மாதம் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையில் மாருதியின் பலேனோ மாடல் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், கடந்த ஜனவரி மாத ஹேட்ச்பேக் விற்பனை சந்தையின் பெரும்பான்மையான பங்கை மாருதி பலேனோ தனியாளாக ஆக்கிரமித்துள்ளது.

அதாவது மொத்த ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி பலேனோ மட்டுமே 56 சதவீதத்தை பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 20,485 யூனிட்கள் விற்பனையான பலேனோ மாடல், 16,717 கார்கள் விற்பனையான 2019 ஜனவரி மாதத்தை விட சுமார் 23 சதவீதம் விற்பனையில் வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதன் ரீ-பேட்ஜ்டு மாடலான புதிய டொயோட்டா க்ளான்ஸா 2,191 யூனிட்கள் விற்பனையுடன் இந்த லிஸ்ட்டில் அல்ட்ராஸ் மாடலுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் உள்ளது. இந்த வரிசையின்படி பார்த்தால், இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடல் உள்ளது.

கடந்த மாதத்தில் 8,137 கார்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தை பெற்றிருந்தாலும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 30.74% குறைவாகும். 2019 ஜனவரியில் ஹூண்டாய் ஐ20 மாடல் 11,749 யூனிட் கார்களின் விற்பனையை பதிவு செய்ந்திருந்தது.

மேலும் ஐ20 ஹேட்ச்பேக் மாடலின் பிஎஸ்6 வெர்சன் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் கடந்த மாத புதிய அறிமுக மாடலான டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் உள்ளது.

ஐந்தாவது இடத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ கார் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 632 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ள இந்த போலோ ஹேட்ச்பேக், 2019 ஜனவரியில் 1,426 கார்கள் விற்பனையாகி இருந்தது.

இதன்மூலம் அந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 56 சதவீதம் வீழ்ச்சியாகும். இந்த லிஸ்ட்டில் 6வது மற்றும் 7வது இடங்களில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மற்றும் ஹோண்டா ஜாஸ் மாடல்கள் உள்ளன.

கடந்த மாதத்தில் 331 மற்றும் 46 என்ற விற்பனை கார்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள இந்த மாடல்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் பெரும் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக 7வது இடத்தில் உள்ள ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக் 2019 ஜனவரி மாதத்தை விட கடந்த மாதத்தில் சுமார் 97 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியை அடைந்துள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலின் இந்த கடந்த மாத விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 79.89 சதவீதம் குறைவாகும். ஹோண்டா ஜாஸ் மாடலின் MY 2020 ஸ்டாக் கார்களுக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.20,000க்கு எக்ஸ்போனஸும், MY 2019 ஸ்டாக் மாடல்களுக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடி, ரூ.20,000க்கு எக்ஸ்போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராஸ் மாடலுடன் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது. இவை எல்லாமே அதனதன் பிரிவில் அதிகளவில் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார்களாக விளங்குகின்றன.

அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் அறிமுக நாளில் இருந்து பத்து நாட்களுக்குள்ளாக க்ளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் அமைப்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு 5 நட்சத்திரங்களை பெற்று வந்தது. டாடா நிறுவனத்தின் இந்த புதிய ஹேட்ச்பேக் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹேட்ச்பேக் பிரிவில் டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் எதிர்பார்த்தது தான். இனி வரும் மாதங்களில் இந்த புதிய ஹேட்ச்பேக் மாடலின் விற்பனை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








