விற்பனையை மீட்டெடுக்க கார்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டாடா மோட்டார்ஸ்!
கொரோனாவால் விற்பனை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டாடா மோட்டார் நிறுவனம் தனது புதிய கார் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சிறப்பு சேமிப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பிரச்னையால் கார் மார்க்கெட் முடங்கி போயுள்ளது. வழக்கமான விற்பனை இல்லாததால், கார் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. படிப்படியாக கார் விற்பனையை எப்படியாவது சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு தள்ளுபடி சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டாடா மோட்டார் நிறுவனம் தனது புதிய கார் மாடல்களுக்கு சிறப்புத் தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது.

டாடா டியோகா காருக்கு ரூ.30,000 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. நேரடி தள்ளுபடியாக ரூ.15,000 வரையிலும், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்குவோருக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை பணியாளர்கள், டாக்டர்கள், காவல் துறையினருக்கு ரூ.5,000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டாடா டிகோர் செடான் காருக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. விலையில் நேரடியாக ரூ.20,000 வரையில் தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோரை கவுரப்படுத்தும் விதத்தில் ரூ.5,000 சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி காருக்கு நேரடி தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் இல்லை. கொரோனா தடுப்புப் பணியில் உள்ளோருக்கு மட்டும் சிறப்புத் தள்ளுபடியாக ரூ.3,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. நேரடி தள்ளுபடி இல்லை. பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கினால் ரூ.30,000 போனஸ் காருக்கு சேர்த்துக் கொள்ளப்படும். மேலும், சிறப்பு தள்ளுபடியாக ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் காருக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனினும், டீலர் அளவில் சில சிறப்புத் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. அதேநேரத்தில், சிறப்பு கடன் திட்டங்கள் மூலமாக இந்த காரை எளிதாக வாங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

டாடா கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி சலுகைகள் தவிர்த்து எளிய கடன் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் மாத பட்ஜெட்டில் அடங்கு வகையில் மாதத் தவணைகளை அமைத்துக் கொள்வதற்கான சிறப்பு கடன் திட்டங்களும் உள்ளதாக அந்நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. சலுகைகள், கடன் திட்டங்கள் டீலருக்கு டீலர் மாறுபடும் வாய்ப்புள்ளது. கூடுதல் தகவல்களை அருகிலுள்ள டாடா டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








