டாடா எச்2எக்ஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலிலும் அறிமுகமாகிறது?
டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அடிப்படையிலான எலெக்ட்ரிக் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார மார்க்கெட்டிலும் சரவெடி கொளுத்த ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே, டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் மின்சார மாடல்களை வைத்திருக்கும் அந்நிறுவனம் நாளை நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியானது தனி நபர் மார்க்கெட்டை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட இருப்பதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், தொடர்ந்து பல புதிய எலெக்ட்ரிக் மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். அடுத்து அல்ட்ராஸ் காரின் மின்சார மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எச்2எக்ஸ் ஹார்ன்பில் மினி எஸ்யூவியின் மின்சார மாடலையும் களமிறக்க உள்ளதாம்.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவி அல்ட்ராஸ் கார் போன்றே, அல்ஃபா ஆர்க் பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் அடிப்படையிலான மின்சார மாடலானது விலை மிக குறைவாக நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது.

அதாவது, ரூ.10 லட்சத்திற்குள் இந்த புதிய மின்சார எஸ்யூவியை களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மஹிந்திரா நிறுவனம் தனது கேயூவி100 அடிப்படையிலான மின்சார மாடலை ரூ.10 லட்சத்திற்குள் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.10 லட்சத்திற்குள் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க எலெக்ட்ரிக் கார் மாடல்களை சரியான பட்ஜெட்டில் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் இருக்கும் 21.5kWh பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இதே பேட்டரியை இந்த மினி எஸ்யூவியிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 213 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதாவது, நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.

இந்த பேட்டரிக்கு வீட்டு சார்ஜர் மட்டுமின்றி, ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கான வசதியையும், கட்டமைப்பையும் டாடா மோட்டார்ஸ் ஏற்படுத்தி கொடுக்கும்.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப சிறப்புகளை எதிர்பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் டாடா எச்2எக்ஸ் அடிப்படையிலான மின்சார மாடலை எதிர்பார்க்கலாம். இது விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்பதால், நிச்சயம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








