பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் வருகிறது டாடா ஹாரியர் எஸ்யூவி!
டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிஎஸ்-6 எஞ்சின் அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறனுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா ஹாரியர் எஸ்யூவி சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டாடா ஹாரியர் பிஎஸ்-6 மாடலில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் சன்ரூஃப் இடம்பெற இருப்பது குறித்த விபரம் தெரிய வந்தது.

இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிக சக்திவாய்ந்ததாக மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. தற்போது அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர் மூலமாக இது தெரிய வந்துள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பிஎஸ்-4 டீசல் எஞ்சின் 140 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. ஆனால், இந்த டீசல் எஞ்சின் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனுடன் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அதாவது, இதன் 2.0 லிட்டர் பிஎஸ்-6 எஞ்சின் 30 எச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் திறனுடன் வர இருக்கிறது. இதன்மூலமாக சந்தைப் போட்டியை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்பட இருக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 மாடல் விலை கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் ரூ.1 லட்சம் வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் மட்டுமின்றி, இதே டீசல் எஞ்சின் ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலாக வர இருக்கும் கிராவிட்டாஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. கிராவிட்டாஸ் எஸ்யூவியும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-4 மாடலைவிட பிஎஸ்-6 மாடல்களின் விலை ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் நேரடி போட்டியாளராக இருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியிலும் இதே டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








