டாடா ஹாரியர் எஸ்யூவியில் விரைவில் பெட்ரோல் மாடல் அறிமுகம்!
டாடா ஹாரியர் எஸ்யூவியில் சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா ஹாரியர் சிறந்த தேர்வாக இருக்கிறது. இருப்பினும், சந்தைப் போட்டி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், டாடா ஹாரியர் விற்பனை குறைந்துவிட்டது. இதனை மனதில் வைத்து ஹாரியர் எஸ்யூவியின் மதிப்பை கூட்டும் விஷயங்களில் டாடா மோட்டார்ஸ் கவனம் செலுத்தி வருகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் தற்போது 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஃபியட் நிறுவனத்திடமிருந்து இந்த டீசல் எஞ்சின் சப்ளை பெறப்படுகிறது.

இந்த நிலையில், சந்தையில் பெட்ரோல் எஞ்சின் கொண்ட வேரியண்ட்டுகளுக்கே அதிக வரவேற்பு உள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் கவனத்தை எளிதில் கவரும் வகையில், சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு ஹாரியர் எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கிறது.

தற்போது டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதன் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை ஹாரியர் எஸ்யூவியில் பயன்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது.

மேலும், இந்த எஞ்சினுடன் டிரைவிங் மோடுகளும் வழங்கப்படும். இதனை வைத்து ஓட்டுபவர் விருப்பம்போல் அல்லது சாலை சூழலுக்கு தக்கவாறு எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த புதிய 1.5 லிட்டர் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடுதலாக ஸ்போர்ட் என்ற அதிக செயல்திறனை வழங்கும் ஸ்போர்ட் டிரைவிங் மோடு ஆப்ஷனையும் இந்த மாடல் பெற்றிருக்கும்.

இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் டாடா கிராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவியிலும் வழங்கப்படும். வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சினை ஹாரியர் எஸ்யூவியில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மிட்சைஸ் எஸ்யூவி சந்தையில் ஹாரியருக்கு கடும் போட்டியை அளித்து வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 143 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது. அதனைவிட ஹாரியர் எஸ்யூவியை செயல்திறன் மிக்க மாடலாக நிலைநிறுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








