டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது டாடாவின் புதிய மினி எஸ்யூவி!
டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த மாதம் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல பட்ஜெட் கார்களில் டீசல் எஞ்சின் தேர்வு விலக்கப்பட்டுவிட்டது. டீசல் எஞ்சின்களை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்துவதும், அதற்கான வர்த்தக வாய்ப்பு குறைவாக இருப்பதும் முக்கிய காரணங்களாக உள்ளன.

இதனால், டீசல் எஞ்சின் தேர்வுக்கு மாற்றாக, அதற்கு ஓரளவு இணையான ஓட்டுதல் உணர்வை வாடிக்கையாளர்களிடம் வழங்கும் விதத்தில் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல்களை கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அந்த வகையில், தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி காரில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை அறிமுகம் செய்ய இருப்பதாக காடிவாடி தளத்தின் செய்தி கூறுகிறது.

அதற்போது டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட கார்களில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி புதிய பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மினி எஸ்யூவி ரூ.4.5 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வர இருப்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாடா மோட்டார் நிறுவனத்தின் அல்ஃபா கட்டமைப்புக் கொள்கையில் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்க புதிய கார் ஹேட்ச்பேக் கார் விலையில் எஸ்யூவி தேர்வாக நிலைநிறுத்தப்படும்.

எல்இடி பகல்நேர விளக்குகள், சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பில்லரில் கைப்பிடிகள், அலாய் வீல்களுடன் கவர்ச்சிகரமான எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது இளம் தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் இருககும்.

டியாகோ, அல்ட்ராஸ் கார்களை போன்றே அதிக வசதிகள் கொண்டதாகவும் இருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. ஹார்மன் ஹெட் யூனிட் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








