டாடா ஹார்ன்பில் எஸ்யூவிக்கு வரிசை கட்டும் டீசர்கள்... ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது
டாடா ஹார்ன்பில் எஸ்யூவிக்கு டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தம் புதிய மினி எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களையும், டீசரையும் இந்த செய்தியில் காணலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எஸ்யூவி மார்க்கெட்டில் வகை வகையான மாடல்களை நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. டாடா நெக்ஸான், ஹாரியர் வரிசையில், கிராவிட்டாஸ் மற்றும் பெயரிடப்படாத புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹார்ன்பில் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி வரும் 5ந் தேதி துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி மீது ஆவலை அதிகப்படுத்தும் விதமாக, டீசர்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலானது 3,840 மிமீ நீளமும், 1,822 மிமீ அகலமும், 1,635 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த காரின் வீல் பேஸ் 2,450 மிமீ ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரெனோ க்விட், மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்களுக்கும் மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் மாடலுக்கும் போட்டியாக இந்த புதிய மைக்ரோ எஸ்யூவியை நிலைநிறுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் உள்ளதாகவும் தெரிகிறது. சில பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.

டாடா ஹாரியர் போன்றே, இந்த காரிலும் பம்பரில் அமையப் பெற்ற புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், வலிமையான முக அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கும். அதாவது, மினி ஹாரியர் போன்ற முக அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா மினி எஸ்யூவியில் கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், பெரிய சன்ரூஃப் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, உட்புறத்தில் ஃப்ளோட்டிங் வகை திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்ப்டடு இருக்கும்.

புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவியானது டாடா அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்ட அதே அல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் எதிர்பார்க்கலாம். ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு பின்னர் வழங்கப்படும்.

ரூ..4.50 லட்சம் விலையில் இந்த புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய மாடலாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








