டாடா ஹாரியர் எஸ்யூவியின் முதலாண்டு கொண்டாட்டம்... சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு
டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, உரிமையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

கடந்த ஆண்டு ஜனவரியில் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹாரியர் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் களமிறக்கியது. மிக சவாலான விலையில், பிரம்மாண்ட தோற்றம் ஆகியவை இந்த எஸ்யூவிக்கு துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.கடந்த ஓர் ஆண்டில் 15,000க்கும் மேற்பட்ட ஹாரியர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற கார்களின் வருகையால், டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்ட ஓர் ஆண்டு நிறைவு பெறும் தருவாயில், சிறப்புச் சலுகைகளை ஹாரியர் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

அதாவது, ஹாரியர் எஸ்யூவிக்கு கட்டணமில்லாமல் 40 விதமான பரிசோதனைகளை செய்து தரும் திட்டத்தை அறிவித்துள்ளது. அத்துடன், ஹாரியர் எஸ்யூவிக்காக விசேஷ பேட்ஜ் மற்றும் புதிய ஸ்கஃப் பிளேட்டுகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஹாரியர் சர்வீஸ் கோல்டு க்ளப் திட்டத்தில் உறுப்பினர்களாக சேரும் உரிமையாளர்களுக்கு சர்வீஸ் செய்யும்போது ரூ.8,400 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பும் வழங்கப்படும்.

ஜனவரி 9ந் தேதி முதல் 19ந் தேதி வரை ஹாரியர் எஸ்யூவிக்கான சிறப்பு பரிசோதனை முகாம்களில் பங்கேற்று பயனடையுமாறும், முன்பதிவு செய்து கொள்ளுமாறும் உரிமையாளர்களை டாடா மோட்டார்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோன்று, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஹாரியர் எஸ்யூவியை வாங்குவதற்கு பரிந்துரை செய்பவர்களுக்கு ரூ.5,000 மதிப்புடைய கிஃப்ட் வவுச்சரும் வழங்கப்படும். வரும் 31ந் தேதிக்குள் முன்பதிவு செய்தால் இந்த சலுகையை பெற முடியும்.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 (D8) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 கொள்கையில் உருவாக்கப்பட்ட முதல் டாடா கார் ஹாரியர்தான் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

இந்த காரில் ஹாலஜன் ஹை பீம் லைட்டும், எச்ஐடி புரொஜெக்டர் லோ பீம் லைட்டும் ஹெட்லைட்டில் பெற்றிருக்கிறது. 17 அங்குல அலாய் சக்கரங்கள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், வலிமையான உடல் அமைப்பு ஆகியவை பலம் சேர்க்கிறது.

இந்த காரில் 8.8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் 7 அங்குல மின்னணு திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








