கடனை கட்ட முடியாதோ என்ற கவலை வேண்டாம்... டாடா டியாகோ காருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்!
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழலை மனதில் வைத்து, டாடா டியாகோ காருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கடன் திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையால் கார் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மிக மோசமான சூழலை கார் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களும் வேலை இழப்பு அச்சம், நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பதால், கார் வாங்கும் திட்டங்களை ஒத்தி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை மனதில் வைத்து டியாகோ காருக்கு சிறப்பு கடன் திட்டங்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. தனது டாடா பைனானஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த சிறப்பு கடன் திட்டங்களை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கடன் திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையிலும், வேலை இழப்பு, நிதி பிரச்னை போன்றவற்றால் மாதத் தவணை கட்ட வேண்டிய கட்டாயம் இல்லாமலும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கடன் திட்டம் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அளவு கொண்டது. முதல் ஆறு மாதங்களுக்கு மாதத் தவணையாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, மாதத் தவணை சீராக அதிகரிக்கும்.

இந்த சிறப்பு கடன் திட்டத்தில் புல்லட் மாதத் தவணையும் வழங்கப்படுகிறது. அதாவது, குறைவான மாதத் தவணையை செலுத்தக் கூடிய வகையிலும், கடைசி மாதத் தவணை மட்டும் ரூ.90,000 செலுத்தும் வகையிலும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத் தவணையை ஒரே முறையில் செலுத்தும் அவசியமும் இல்லை. வாடிக்கையாளர் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அதனை ரீ-பைனான்ஸ் மூலமாக மாதத் தவணையாக பிரித்து செலுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

இதுதவிர்த்து, வேலை இழப்பு அல்லது நிதி நெருக்கடியில் சிக்கி மாதத் தவணை செலுத்த முடியாவிட்டால் காரை நிதி நிறுவனத்திடமே திரும்ப ஒப்படைக்கும் வழிவகையும் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர் அச்சப்படாமல் டியாகோ காரை வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டியாகோ கார் தவிர்த்து, நெக்ஸான் மற்றும் ஹாரியர் எஸ்யூவி மாடல்களின் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார்களுக்கான கடனை 8 ஆண்டுகள் மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் கால அளவும் வழங்கப்படுகிறது.

மேலும், டாக்டர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டு இருப்போருக்கு ரூ.45,000 வரை சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வழங்குவதாகவும் டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








