டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் அறிமுகமாகிறது
டாடா ஹாரியர் பிஎஸ்-6 மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் கார் மிட் சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மதிப்புவாய்ந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களின் வருகையால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த சூழலில், ஹாரியர் எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் இறங்கி இருக்கிறது. அதன்படி, கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹாரியர் எஸ்யூவியை விரைவில் களமிறக்க உள்ளது டாடா மோட்டார்ஸ். அதாவது, அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் முக்கிய அம்சமாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

அத்துடன், டாடா ஹாரியர் எஸ்யூவியின் எஞ்சின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய எஞ்சின் 140 பிஎஸ் பவரை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
மேலும், பிஎஸ்-6 ஹாரியர் எஸ்யூவிக்காக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய டீசரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மிக நீண்ட மாதங்களாக எதிர்பார்த்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி கொண்ட ஹாரியர் எஸ்யூவி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட உள்ளது. தற்போது வழங்கப்படும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் தக்க வைக்கப்படும்.

ஏற்கனவே, டாடா அல்ட்ராஸ் கார் அறிமுக தினத்தன்றே, டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய மாடல் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் டாடா ஹாரியர் வருவது குறித்த இரண்டாவது டீசரும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய டாடா ஹாரியர் பிஎஸ்-6 மாடலுடன், கிராவிட்டாஸ் என்ற 7 சீட்டர் ஹாரியர் எஸ்யூவியும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.13.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய பிஎஸ்-6 மாடலின் விலை நிச்சயம் கணிசமாக அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications