26 புதிய வாகனங்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் டாடா...
விரைவில் நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு தயாரிப்பு மாடல்களையும் கான்செப்ட் வாகனங்களையும் அறிமுகப்படுத்த மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவலினை இனி இந்த செய்தியில் காண்போம்.

டாடா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்திகளாக தான் பரவி வருகின்றன. கசிந்துவரும் இந்த வதந்தியின்படி, டாடா நிறுவனத்தில் இருந்து 14 கமெர்சியல் மாடல்களும், 12 பயணிகள் வாகனங்களும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பயணிகள் மாடல் கார்களாக கிராவிட்டாஸ் எஸ்யூவி, ஹெரியர் பிஎஸ்6, புதிய டியாகோ, புதிய டிகோர் மற்றும் அல்ட்ராஸ் ஜிடிபி உள்ளிட்டவை எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றுடன் மைக்ரோ எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள எச்2எக்ஸ் கான்செப்ட் மாடலும் ஆட்டோ எக்ஸ்போவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே 2019 ஜெனிவா மோட்டார் ஷோவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எச்2எக்ஸ் கான்செப்ட், அந்த கண்காட்சியில் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. இந்த எண்ட்ரீ-லெவல் எஸ்யூவி தான் டாடா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுவரும் மிக சிறிய வாகனமாகும்.

காட்சிப்படுத்துவதுடன் இந்த புதிய காரை பற்றிய தகவல்களையும் டாடா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நமது தளத்திற்கு இந்த காரின் என்ஜினை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இந்த மைக்ரோ எஸ்யூவி மாடல் பிஎஸ்6 தரத்தில் டாடா அல்ட்ராஸ் மற்றும் டியாகோ கார்கள் கொண்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெறவுள்ளது.

மேலும் இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் ஹார்ன்பில் என்கிற பெயரில் அறிமுகமாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது. கிராவிட்டாஸ் மாடலும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனத்தில் இருந்து காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலும் ஹெரியர் பிஎஸ்6 மாடலும் எக்ஸ்போவில் அருகருகே நிறுத்தப்படவுள்ளன.

இதேபோன்று நெக்ஸான் மாடலின் ஃபேஸ்லிஃப்ட், டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் புதிய வெர்சன்கள் உள்ளிட்டவற்றையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இவற்றை தவிர எலக்ட்ரிக் வாகனங்களின் பிரிவில் நெக்ஸான் இவி மற்றும் அல்ட்ராஸ் இவி வாகனங்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம்.

புதிய அறிமுக கார்கள் குறித்து டாடா மோட்டார்ஸின் முதன்மை நிர்வாக இயக்குனர் குண்டர் புட்செக் கூறுகையில், ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் எங்களது பெவிலியனுக்கான தீம்-ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தீம் எங்களது வருங்கால சிஇஎஸ்எஸ் (கனெக்டட், எலக்ட்ரிக், ஷேர் மற்றும் ஷேஃப்) என்கிற குறிக்கோளை உயிருடன் வைத்திருக்க உதவும் என நம்புகிறோம்.

வருங்காலத்திற்கு பசுமையான போக்குவரத்து மிகவும் அவசியமானதாக உள்ளது. மதிப்புமிக்க நிறுவனமாக, எங்களது ஒவ்வொரு நகர்வும் புதிய தயாரிப்புகளை வேகமாக மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதில் தான் உள்ளது என கூறினார்.

வெளியாகியுள்ள இந்த தகவல்களின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பெரும்பாலான பிஎஸ்6 கார்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. இவ்வாறு 26 புதிய தயாரிப்பு கார்களை அறிமுகப்படுத்துவதால், அடுத்த 2 வருடங்களுக்கு டாடா நிறுவனத்தின் விற்பனையில் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.


Click it and Unblock the Notifications








