நெக்ஸானில் புதிய டர்போ என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் டாடா!! மீண்டும் சோதனை ஓட்டம்
சோதனை கார்களுடன் டாடா நெக்ஸான் பொது சாலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா சொனெட்டின் வருகை சப்-4 மீட்டர் க்ராஸ்ஓவர் பிரிவில் மோதலை அதிகரித்துள்ளது. இதனால் காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய அப்கிரேடை கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்த வகையில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான நெக்ஸானிற்கு புதிய பெட்ரோல் என்ஜினை ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (டிசிடி) ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கவுள்ளது.

எலக்ட்ரிக் வெர்சனிலும் வழங்கப்படுகின்ற டாடா நெக்ஸான் முன்னதாக இந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் அதன் எலக்ட்ரிக் வெர்சனுக்கும் சேர்த்து ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்-ஐ பெற்றிருந்தது. தற்சமயம் நெக்ஸானில் ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது.

நெக்ஸானின் பெட்ரோல் டிசிடி வேரியண்ட் கடந்த சில வாரங்களாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் நெக்ஸானின் இந்த புதிய வேரியண்ட் வழக்கம்போல் மாசு உமிழ்வு அளவீட்டு கருவிகளுடன் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

புனேவுக்கு அருகே நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் நெக்ஸான் பெட்ரோல் டிசிடி உடன் அடுத்த 2021ஆம் வருடத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் கிராவிட்டாஸ் 7-இருக்கை எஸ்யூவி காரும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

நெக்ஸானில் புதியதாக வழங்கப்படவுள்ள புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்ட்ராஸ் டர்போ காரிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 6 விகிதங்களாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த கியர்பாக்ஸ் பஞ்ச் பவர்ட்ரெயின் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கியர்பாக்ஸ் நிச்சயம் பயண அனுபவத்தை மேம்படுத்தும். இந்த புதிய சிவிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடன் புதியதாக 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ-பெட்ரோல் என்ஜினும் நெக்ஸானில் வழங்கப்படவுள்ளது.

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 119 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளது. இந்த புதிய டர்போ-பெட்ரோல் என்ஜினை தொடர்ந்து விரைவில் எந்தவொரு தோற்ற மாற்றமும் இன்றி டீசல் என்ஜின் தேர்வும் நெக்ஸானிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் டர்போ-பெட்ரோல் டிசிடி காருக்கு போட்டியாக கியா சொனெட் டிசிடி மற்றும் ஹூண்டாய் வென்யூ டிசிடி கார்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் டாடாவின் இந்த புதிய டர்போ காரின் விலை வழக்கமான நெக்ஸானின் விலையை காட்டிலும் ரூ.1 லட்சம் அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








