ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாக புதிய செடான் கார் மாடலை உருவாக்கும் டாடா!
டாடா அல்ட்ராஸ் காரின் அடிப்படையில் புதிய செடான் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் இறங்கி உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் தேவையை கச்சிதமாக புரிந்து கொண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஹேட்ச்பேக், எஸ்யூவி வகை கார்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது.

இந்த வரிசையில், தற்போது புத்தம் புதிய செடான் கார் மாடலையும் அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான புதிய செடான் மாடலாக இது உருவாக்கப்படுகிறது.

இந்த பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. டாடா அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்ட அல்ஃபா கட்டமைப்புக் கொள்கையில் புதிய செடான் கார் மாடல் உருவாக்கப்படுகிறது.

இந்த புதிய செடான் கார் மாடலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இறுக்கும்.

மேலும், கடந்த 2018ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்த E-Vision செடான் காரின் கான்செப்ட் டிசைன் அம்சங்களும் பயன்படுத்தப்படும்.

புதிய செடான் கார் மாடலில் பயன்படுத்தப்பட இருக்கும் எஞ்சின் தேர்வுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளை இந்த புதிய செடான் மாடலில் எதிர்பார்க்கலாம்.

மேலும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்டர்நெட் வசதி, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த செடான் காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செடான் கார் மாடலானது மிட்சைஸ் செடான் ரகத்தில் உருவாக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே, மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியை தரும்.

போட்டியாளர்களைவிட இது மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது. இந்த புதிய செடான் கார் குறித்து விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








