நவீன கால சியரா எஸ்யூவிக்காக வீடியோ வெளியிட்ட டாடா... பித்துபிடித்துபோன ஆஃப் ரோடு பிரியர்கள்..!
2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய சியரா எஸ்யூவி கார்குறித்த வீடியோவை டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா நிறுவனம் அதன் முதல் எஸ்யூவி மாடலாக உருவாக்கிய சியரா-விற்கு உயிர்ப்பு வழங்கும் விதமாக புதிய தோற்றத்தை வழங்கி 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்த கார் 90-ஸ் காலகட்டத்தின் ஆஃப் ரோடு வாகன பிரியர்களின் மிகவும் பிடித்தமான ஓர் வாகனமாகும்.

இதன்காரணமாகவே, மீண்டும் அந்த காரை நவீன யுகத்திற்கு ஏற்ப வடிவமைத்து டாடா காட்சிப்படுத்தியது.
இந்நிலையில், இந்த கார்குறித்த ஆவலை ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கும் விதமாக புதிய அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றையும் அது தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியதை அடுத்து இரண்டாம் கட்ட நடவடிக்கையாக டாடா நிறுவனம் புதிய சியரா எஸ்யூவி-யின் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் வீடியோ க்ளிப் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த கார் மிக விரைவில் உற்பத்திக்கூட தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, இந்த கார் ஆட்டோ எக்ஸ்போவில் அநேகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. இதையறிந்த டாடா, அடுத்தகட்ட நடவடிக்கையாகவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீடியோவில் காரின் அமைப்பு, தோற்றம், தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றின் சிறப்பு வசதிகளைப்பற்றி விளக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப் போன்ற இசை பின்னணியில் ஒலிக்க காரின் பக்கவாட்டு தோற்றம் காட்சிப்படுத்தப்படுகின்றது. இதையடுத்து, காரின் வீல், முகப்பு க்ரில், இன்டீரியர், பின்பக்க தோற்றம் மற்றும் ரூஃப் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தொடர்ந்து, இந்த எஸ்யூவியின் பின்பக்க மேற்பரப்பில், மிகப்பெரிய சன்ரூஃப் வழங்கப்பட்டிருப்பதும் காட்சிக்குள்ளாகியுள்ளது. இது அண்டத்தை பரந்து விரிந்த பார்வையில் பார்க்க உதவும்.
இதுமட்டுமின்றி, காரின் இன்டீரியரில் கூடுதலாக பல்வேறு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 'ட' வடிவமைப்பில் காணப்படும் இருக்கை மற்றும் சுழலக்கூடிய தனி இருக்கை உள்ளிட்டவை சியரா இன்டீரியருக்கு வெற லெவல் தோற்றத்தை வழங்கியிருக்கின்றது.

தொடர்ந்து, வெளிப்புறத் தோற்றத்தில் சியராவிற்கு பிரமாண்ட லுக்கை வழங்கும் விதமாக மிகப்பெரியளவிலான முகப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெரியளவில் ஆர்பரிக்காத வகையிலான மெல்லிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எலெக்ட்ரிக் கார்களுக்கே உரித்தான மூடிய முன்பகுதி அமைப்பு, திடகாத்திடமான பம்பர் உள்ளிட்டவை இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதைவிட முக்கியமானதாக இந்த கார் ப்யூவல் காராக இல்லாமல் மின்சார காராக இருப்பது மிகச் சிறந்த மாற்றமாக உள்ளது. ஆனால், இந்த காரின் ரேஞ்ச் மற்றும் பேட்டரி பேக் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. சியராவை டாடா கான்செப்ட் மாடலாகவே காட்சிப்படுத்தியுள்ளது. ஆகையால், இந்த காரின் அடுத்த அறிமுகத்தின்போது கூடுதல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த காரின் வலிமைக்காக மிகவும் உறுதியான கிளாடிங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது, காருக்கு உறுதி தன்மை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், கவர்ச்சியான தோற்றத்தையும் வழங்குகின்றது. மேலும், சியராவில் நிறுவப்பட்டிருக்கும் ட்யூவல் டோன் அலாய் வீல் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் அதற்கு நவீன கால கார்களைப் போன்ற தோற்றத்தை வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications








