கண்டுபிடிச்சுட்டோம்ல... எல்லாரும் மாருதி ஸ்விப்ட் காரையே வாங்கும் ரகசியம் இதுதான்... என்ன தெரியுமா?
மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரை இந்தியர்கள் ஏன் அதிகமாக வாங்குகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் மிக நீண்ட காலமாகவே ஸ்விப்ட் காரை விற்பனை செய்து வருகிறது. இந்திய மக்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பின் காரணமாக, அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஸ்விப்ட் திகழ்கிறது. வாடிக்கையாளர்கள் ஸ்விப்ட் காரை இன்னமும் ஏன் வாங்கி வருகின்றனர்? என்பதற்கான உண்மையான காரணங்களைதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ஆட்டோமெட்டிக் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள்
இந்த செக்மெண்ட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை வழங்கும் ஒரே கார் மாருதி சுஸுகி ஸ்விப்ட் மட்டும்தான். 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், 5-ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.

ஆனால் ஸ்விப்ட் காரின் டீசல் வேரியண்ட்களை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் விற்பனையில் இருந்து விலக்கவுள்ளது. ஸ்விப்ட் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களின் டீசல் வேரியண்ட்களும், பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக விற்பனையில் இருந்து விலக்கப்படவுள்ளன.

மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல்
புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் பெட்ரோல் மாடலின் விலை 5.19 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப்-எண்ட் டீசல் ஆட்டோமெட்டிக் வெர்ஷன் விலை 8.84 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்). போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், ஸ்விப்ட் காரில் ஏராளமான வேரியண்ட்கள் உள்ளன.

இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்களில் கூட ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உள்ளது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதுதவிர யூஸ்டு கார் மார்க்கெட்டில், ஸ்விப்ட் காருக்கு நல்ல ரீ-சேல் வேல்யூ உள்ளது. எனவே ஸ்விப்ட் காரை வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்.

எரிபொருள் சிக்கனம்
பொதுவாக மாருதி சுஸுகி நிறுவன கார்கள் அதிக மைலேஜை வழங்க கூடியவை. ஸ்விப்ட்டும் அப்படித்தான். ஸ்விப்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.2 லிட்டர் விவிடி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 22 கிலோ மீட்டர்கள் மைலேஜை வழங்க கூடியது. இது அராய் சான்று வழங்கிய மைலேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஸ்விப்ட் வேரியண்ட்கள், அதிகபட்சமாக லிட்டருக்கு 28.4 கிலோ மீட்டர்கள் மைலேஜை வழங்க வல்லவை. உண்மையில் இது தனித்துவமான மைலேஜ். புதிய தலைமுறை ஸ்விப்ட் கார், ஹார்ட்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. இதன் மூலமாக முந்தைய வெர்ஷனை விட காரின் எடை சுமார் 100 கிலோ குறைந்துள்ளது.

சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க்
இந்தியாவில் மிக பிரம்மாண்ட சர்வீஸ் நெட்வொர்க்கை மாருதி சுஸுகி வைத்துள்ளது. இந்தியாவில் மாருதி சுஸுகி சர்வீஸ் சென்டர்களுக்கு பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு சில கிலோ மீட்டர்கள் இடைவெளியிலும் உங்களால் சர்வீஸ் சென்டரை கண்டறிய முடியும். எனவே கார் பழுது என்றால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

இதனால் மாருதி சுஸுகி நிறுவனம் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்து விடுகிறது. ஸ்விப்ட் காரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். அத்துடன் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்வதற்கும் இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications








