மீண்டும் எஸ்யூவி பிரிவில் முன்னிலையில் கியா செல்டோஸ்... 2020 ஜனவரியின் சிறந்த விற்பனை கார் எது..?
2020 ஜனவரி மாதத்தில் சிறப்பாக விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கை அதிகளவில் ஓங்கியுள்ளது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதல் 5 இடங்களை மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் பிடித்துள்ளன. இந்த 5 கார்களையும் மற்ற 5 மாடல்களையும் இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

மாருதி சுஸுகி டிசைர்
இந்திய சந்தையில் அதிகப்பட்சமாக விற்பனையாகி இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தை மாருதி டிசைர் காம்பெக்ட்-செடான் மாடல் பிடித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 22,406 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ள இந்த மாடல் கடந்த வருட ஜனவரி மாதத்தில் 19,073 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது.

இதன்மூலம் மாருதி டிசைர் மாடல் 2019 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 17 சதவீத விற்பனை வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த மாதம் மட்டுமின்றி கடந்த சில வருடங்களாகவே அனைத்து மாதங்களின் இந்த விற்பனை லிஸ்ட்டிலும் முதல் ஐந்து இடங்களுள் இந்த கார் வந்துவிடுகிறது.

அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் கச்சிதமாக பொருந்தும் இந்த மாருதி சுஸுகி டிசைர் காருக்கு போட்டியாக சந்தையில் ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் அமியோ போன்ற கார்கள் உள்ளன. இந்த காரின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.83 லட்சமாக உள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ
மாருதி சுஸுகி நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பலேனோ கடந்த மாதத்தில் 20,485 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 16,717 யூனிட்கள் விற்பனையான 2019 ஜனவரி மாதத்தை விட 23 சதவீதம் அதிகமாகும்.

ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலான மாருதி பலேனோவிற்கு இந்திய சந்தையில் போட்டியாக டொயோட்டா க்ளான்ஸா, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட மிக குறைவான எண்ணிக்கையிலேயே கார்கள் உள்ளன.

ஆனால் சமீபத்தில் டாடா நிறுவனத்தில் இருந்து பலேனோ மாடலுக்கு கடுமையான போட்டியினை அளிக்கும் விதத்தில் அல்ட்ராஸ் மாடல் அறிமுகமானது. இதனால் பலேனோவின் நடைபெற்றுவரும் பிப்ரவரி மாதத்திற்கான விற்பனை எண்ணிக்கையில் சிறிது வீழ்ச்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்
இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் உள்ளது. பலேனோவை போல் ஹேட்ச்பேக் பிரிவில் மிகுந்த வரவேற்பை பெற்றும் ஸ்விஃப்ட் மாடலின் மூன்றாம் தலைமுறை மாடல் தற்சமயம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தில் 19,981 யூனிட்கள் விற்பனையான இந்த கார் 2019 ஜனவரியை விட 6 சதவீதம் விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 18,795 ஸ்விஃப்ட் கார்கள் இந்திய சந்தையில் விற்பனையாகி இருந்தது.

மேலும் ஸ்விஃப்ட் மாடலில் புதிய ஹைப்ரீட் வெர்சனையும் சந்தைப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த புதிய வெர்சன், இந்திய மார்க்கெட்டிற்கு
இந்த ஆண்டு மத்தியில் வரவுள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ
எண்ட்ரீ-லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் பல வருடங்களாக சிறப்பாக விற்பனையாகும் காராக உள்ளது. இருப்பினும் இந்த ஹேட்ச்பேக் கார் 23,360 யூனிட்கள் விற்பனையான 2019 ஜனவரி மாதத்தை விட கடந்த மாதத்தில் 19 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை அடைந்து 18,914 என்ற விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்துள்ளது.

இந்த ஆல்டோ மாடலின் பிஎஸ்6 வெர்சன் காரை மாருதி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த அப்டேட்டால் சிறிது விலை அதிகரிப்பை பெற்றுள்ள இந்த ஹேட்ச்பேக் காருக்கு ரெனால்ட் க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ மாடல்கள் போட்டியாக உள்ளன.

மாருதி சுசுகி வேகன்ஆர்
மாருதியின் வேகன்ஆர் மாடலை இந்த லிஸ்ட்டில் பல முறை பார்த்துள்ளோம். மிகவும் உயரமான ஹேட்ச்பேக்கான வேகன்ஆர் கடந்த ஜனவரி மாதத்தில் 15,232 யூனிட் கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 2019 ஜனவரி மாதத்தை விட சுமார் 52 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் 10,048 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த இந்த காரானது தனது உருவ அமைப்பால் சந்தையில் மிக பிரபலமான ஹேட்ச்பேக் மாடலாக விளங்குகிறது. இதற்கிடையில் சில டிசைன் மற்றும் உட்புற தொழிற்நுட்பங்களின் அப்டேட்களுடன் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடலின் புதிய தலைமுறை கார் தான் இப்போதும் இதன் விற்பனை ஆதிக்கத்திற்கு முக்கிய காரணம்.
| Rank | Models | Jan'20 | Jan'19 | Growth (%) |
| 1 | Maruti Dzire | 24,406 | 19,073 | 17 |
| 2 | Maruti Baleno | 20,485 | 16,717 | 23 |
| 3 | Maruti Swift | 19,981 | 18,795 | 6 |
| 4 | Maruti Alto | 18,914 | 23,360 | -19 |
| 5 | Maruti WagonR | 15,232 | 10,048 | 52 |
| 6 | Kia Seltos | 15,000 | - | - |
| 7 | Maruti Eeco | 12,324 | 9,063 | 36 |
| 8 | Maruti Vitara Brezza | 10,134 | 13,172 | -23 |
| 9 | Hyundai i10 Grand | 8,774 | 10,285 | -15 |
| 10 | Hyundai i20 Elite | 8,137 | 11,749 | -31 |

கியா செல்டோஸ்
சீனாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பு மாடல் செல்டோஸ் ஆகும். கடுமையான போட்டி நிலவும் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட இந்த காரில் வழங்கப்பட்டிருந்த ஸ்போர்டியான டிசைன், வலிமையான எரிபொருள் திறன் கொண்ட என்ஜின் தேர்வுகள் மற்றும் இந்த என்ஜின்களுடன் அதிகளவில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் உள்ளிட்டவை இந்த எஸ்யூவி மாடலை மிக விரைவாகவே சிறந்த விற்பனை எஸ்யூவியாக சந்தையில் திகழ வைத்தது.

இதனால் ஒவ்வொரு மாதமும் எஸ்யூவி விற்பனையில் முன்னிலை வகித்துவரும் கியா நிறுவனத்தின் இந்த செல்டோஸ் மாடல் கடந்த 2019 டிசம்பர் மாத விற்பனையில் மிக பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திருந்தது. கடந்த டிசம்பரில் வெறும் 4,645 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த இந்த கார், கடந்த ஜனவரியில் ஒரேடியாக முன்னேற்றத்தை கண்டு சுமார் 15,000 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது.

இதன்மூலம் சிறந்த விற்பனை மாடல்களின் லிஸ்ட்டில் 6வது இடத்தை பிடித்தது மட்டுமில்லாமல் சிறந்த விற்பனை எஸ்யூவியாகவும் மீண்டும் உருவெடுத்துள்ளது. இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கியா செல்டோஸ் கடந்த மாத விற்பனையில் சந்தையில் தனக்கு கடுமையான போட்டியினை தொடர்ந்து அளித்துவரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலை முந்தியுள்ளது.

மாருதி சுசுகி ஈக்கோ
இந்த வரிசையில் ஏழாவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஈக்கோ மாடல் உள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த மாடலானது கடந்த மாதத்தில் 12,324 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த பட்ஜெட் கார் 9000 யூனிட்கள் விற்பனையான கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 36 சதவீதம் விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த பட்கெட் ரக காரின் ஆரம்ப விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.3.59 லட்சமாக உள்ளது.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா
எப்போது சந்தையில் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பிடித்துவரும் மாருதி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விற்பனையில் வீழ்ச்சியை அடைந்துவிடுகிறது. இது கடந்த ஜனவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விற்பனையில் கடந்த மாதத்தில் 10,134 யூனிட்களை பெற்றுள்ள மாருதி நிறுவனம், இந்த எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் சரிவை நோக்கி சென்றுள்ளது. 2019 ஜனவரி மாதத்திற்கான விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விற்பனை எண்ணிக்கை 13,172 யூனிட்கள் ஆகும்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10
மாருதி மற்றும் கியா நிறுவனத்தின் கார்களுக்கு அடுத்து வேறொரு நிறுவனத்தின் மாடல் கடந்த மாதத்தில் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்றால் அது, ஹூண்டாய் நிறுவனத்தின் க்ராண்ட் ஐ10 கார் தான். ஹூண்டாயின் பிரபலமான தயாரிப்பு மாடல்களில் ஒன்றாகவுள்ள க்ராண்ட் ஐ10 கடந்த ஜனவரி மாதத்தில் 8774 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 10,285 க்ராண்ட் ஐ10 கார்கள் விற்பனையான 2019 ஜனவரி மாதத்தை விட 15 சதவீதம் குறைவாகும். இருப்பினும் கொரியன் நிறுவனமான ஹூண்டாயில் இருந்து இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான மாடலாக இந்த க்ராண்ட் ஐ10 கார் விளங்குகிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20
விற்பனையில் தொடர்ச்சியாக சரிவை கண்டுவரும் ஹூண்டாய் எலைட் ஐ20, ஜனவரி 2019ஆம் மாதத்தை விட 31 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியடைந்து 8,137 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் எலைட் ஐ20 மாடலின் விற்பனை எண்ணிக்கை 11,749 ஆகும்.

கடந்த ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்ததை போலவே தற்போது வெளியாகியுள்ள இந்த டாப்-10 விற்பனை லிஸ்ட்டும் பல மாறுதல்களை பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய அட்டகாசமான மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இனி வரும் மாதங்களில் இதை விட அதிகளவில் வரிசை மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
Source: Autopunditz


Click it and Unblock the Notifications








