பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் !
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்திய வருகை குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் பிரிமீயம் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 சாய்ஸாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இருந்து வருகிறது. ஆளுமையான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், அதிக நம்பகத்தன்மை கொண்ட மாடலாக இந்தியர்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளது. இதனால், சந்தையில் அசைத்து பார்க்க முடியாத மாடலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய மாடல்கள் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சந்தைப் போட்டியை கொடுத்துள்ளது.

இப்போது எம்ஜி க்ளோஸ்ட்டர் மற்றும் பழைய போட்டியாளர்களாக உள்ள ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடல்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய மாடல் அவசியமாகி உள்ளது. இதனை மனதில் வைத்து அண்மையில் இந்தோனேஷியாவில் வெளியிடப்பட்ட புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியை விரைவில் இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது டொயோட்டா.

இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி வரும் பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், இதுவரை உறுதியானத் தகவல் இல்லை.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் சில முக்கிய வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, புதிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்டதாக முகப்பு புதுப்பொலிவு பெற்றுள்ளது. அதேபோன்று, புதிய ஸ்கிட் பிளேட்டுகள், எல்இடி லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அலாய் வீல்களும் இடம்பெறுகிறது.

உட்புறத்தில் புதிய 9 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் முன்புறத்தில் பார்க்கிங் சென்சார்கள், லேன் கீப் அசிஸ்ட் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோனாமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், பாதசாரிகளை கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இந்த எஞ்சின் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








