புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!
வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும்புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. எத்துனை போட்டி வந்தாலும், அசைக்க முடியாத இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

இந்த நிலையில், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் வருகை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், புதுப்பொலிவுடன் கூடிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியை வரும் ஜனவரி 6ந் தேதி இந்தியாவில் டொயோட்டா களமிறக்க உள்ளது.

இந்த நிலையில், புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பல முக்கிய விபரங்கள் ரஷ்லேன் தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது. அதில், புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஸ்டான்டர்டு மற்றும் லெஜென்டர் என்ற இரண்டு மாடல்களில் வர இருக்கிறது.

புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியன் ஸ்டான்டர்டு மாடலில் முன்பக்க க்ரில் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பர்கள் ஆகியவையும் வடிவமைப்பு மாறுதல்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

இதில், ஃபார்ச்சூனர் லெஜென்டர் மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், இரட்டை வண்ணத் தேர்வு, விசேஷ கருப்பு வண்ண பாகங்களுடன் அதிக வசீகரம் கொண்ட மாடலாக இருக்கும். இந்த மாடலில் 20 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் விலை உயர்ந்த மாடலாக வர இருக்கும் லெஜென்டர் வேரியண்ட்டில் 9.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி வசதி, வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் இரண்டு எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதன் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

இதன் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. டீசல் மாடலில் மட்டுமே ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் சூப்பர் ஒயிட், பியர்ல் ஒயிட், க்ரே மெட்டாலிக், சில்வர் மெட்டாலிக், ஆட்டிடியூட் பிளாக், ஃபான்டம் பிரவுன், ஏவி. பிரான்ஸ், ஸ்பார்க்ளிங் பிளாக் மற்றும் பியர்ல் ஒயிட் - மேட் பிளாக் என்ற இரட்டை வண்ணக் கலவை என 9 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








