எம்ஜி க்ளோஸ்ட்டரால் குடைச்சல்... ஸ்பெஷல் ஃபார்ச்சூனர் மாடலை இந்தியாவில் களமிறக்குகிறது டொயோட்டா?
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜென்டர் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் முதன்மையான தேர்வாக உள்ளது. பல ஆண்டுகளாக விற்பனையில் நம்பர்-1 இடத்தில் இருந்து வருவதுடன், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையுடன் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் வரவால் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி நெருக்கடியை சந்தித்துள்ளது. எண்டெவர் எஸ்யூவியும் தொடர்ந்து நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இந்த நெருக்கடியை போக்கும் விதமாக, ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் அதிக பிரிமீயம் அம்சங்கள் கொண்ட லெஜென்டர் மாடலை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கு டொயோட்டா முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் சாதாரண மாடலைவிட ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கான அதிக ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட மாடல்தான் ஃபார்ச்சூனர் லெஜென்டர். சாதாரண ஃபார்ச்சூனரைவிட அதிக பிரிமீயம் அம்சங்கள் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜென்டர் எஸ்யூவியின் டிசைன் மிக கூர்மையான பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அதிக வசீகரமாக உள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், டைனமிக் எல்இடி இன்டிகேட்டர்கள், விசேஷ கருப்பு வண்ண பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியில் 20 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், கருப்பு வண்ண பூச்சுடன் டெயில் கேட் மற்றும் புதிய பம்பர் அமைப்பு ஆகியவை சற்றே வேறுபடுத்துகிறது.

இந்த எஸ்யூவியில் 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ரேடார் தொழில்நுட்பத்துடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் டோன் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது சக்கரங்களின் எந்த நிலையில், எந்த பக்கத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கான வசதியும் உள்ளது.

இந்த எஸ்யூவியில் 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்கும் டர்போ சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின்தான் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் கொடுக்கப்பட உள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜென்டர் எஸ்யூவி ரூ.40 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் தோற்ற வசீகரம், சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








